அமெரிக்காவில் உற்பத்தியான முட்டைகள் 20ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூரில் மீண்டும் விற்பனை செய்யப்படுகின்றன.
உள்ளூரில் இயங்கும் 50க்கும் மேற்பட்ட ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் அவற்றைப் பொதுமக்கள் தற்போது வாங்கலாம். சிங்கப்பூரின் இறக்குமதி நிறுவனங்கள் தீவு மூழுவதும் உள்ள மேலும் பல கடைகளில் அவற்றை விற்பனை செய்யத் திட்டமிடுகின்றன.
‘கன்டென்டட் ஹென்’ என்ற வர்த்தக முத்திரைப் பெயரில் அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இயற்கையான முறையில் பண்ணைகளில் வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டைகள் எனக் கூறப்படுகிறது. அவை இங்குள்ள ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் 43 பேரங்காடிகளிலும் எட்டுப் பலபொருள் கடைத்தொகுதிகளிலும் தற்போது கிடைக்கின்றன.
அத்தகு 12 நாட்டுக்கோழி முட்டைகள் (வெள்ளை அல்லது பழுப்பு நிறங்களில்) ஒரு பொட்டலம் $12.80 என்ற விலையில் விற்கப்படுகின்றன. அதேவேளை 12 இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழிகளின் 12 முட்டைகள் ஒரு பொட்டலம் $14.80 என்ற விலையில் கிடைக்கின்றன.
முட்டை இறக்குமதிகளுக்குச் சட்ட விதிமுறைகள் 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கடுமையாக்கப்பட்டது. அப்போது சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்ட அமெரிக்க முட்டைகளுக்கு 20 ஆண்டுகளுக்குமுன் தடை விதிக்கப்பட்டது.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் அமெரிக்க வேளாண்துறை அதிகாரிகளும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் ஒரு புரிந்துணர்வை எட்டியபிறகு இப்போதைய இறக்குமதிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
ஏற்றுமதிகளுக்கான தரச் சான்றிதழ்கள் குறித்தும் தொற்று ஏதேனும் ஏற்பட்டால் முட்டைகள் உற்பத்தியான வழித்தொடர்களைக் கண்டறியும் முறைகளைத் தெளிவுபடுத்துதல் போன்றவற்றிலும் இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உற்பத்தியாகும் முட்டைகளின் விலை அமெரிக்க முட்டைகளைவிடப் பன்மடங்கு மலிவானவை. உள்ளூரில் அவ்வகையான 10 முட்டைகள் ஒரு பொட்டலத்துக்கு $2.85 முதல் $4.55 வரை விற்பனை செய்யப்படுகின்றன.


