உலகளாவிய பாதுகாப்புச் சுமையைப் பகிர்ந்துகொள்ளும் “மாதிரிப் பங்காளித்துவ நாடுகளுக்கு” அமெரிக்கா முன்னுரிமை அளிக்கும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் 23வது ஷங்ரிலா கலந்துரையாடலில் அவர் சனிக்கிழமை (மே 30) உரையாற்றினார்.
பாதுகாப்புச் செலவினங்களுக்காக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 விழுக்காட்டை ஒதுக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை ஏற்று, தங்கள் பங்களிப்பை அதிகரித்துள்ள ஆசிய-பசிபிக் வட்டார நாடுகளைத் திரு ஹெக்செத் பாராட்டினார்.
“இந்தச் சவாலை ஏற்று, உண்மையான பங்காளிகளாகப் பொறுப்பேற்கும் நாடுகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் தெளிவாக இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், “எங்களது உத்தியில் குறிப்பிட்டுள்ளதைப் போல, மாதிரிப் பங்காளித்துவ நாடுகளுடன், அதாவது தங்களின் தேசிய நலன்களைப் பாதுகாக்கக்கூடிய மிகச் சிறந்த திறன்மிக்க, தெளிவான தொலைநோக்குடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா முன்னுரிமை அளிக்கும்,” என்றும் அமைச்சர் ஹெக்சேத் கூறினார்.
“அத்தகைய நாடுகளை நாங்கள் முன்னுரிமைப் பட்டியலின் முன்வரிசைக்குக் கொண்டுவருகிறோம். அந்த நாடுகளுக்கு விரைவான ஆயுத விற்பனை, ஆழமான தொழில்துறை கூட்டுறவு, விரிவான வேவுத் தகவல் பகிர்வு ஆகியவையும் வழங்கப்படும்,” என்றும் அவர் உறுதியளித்தார்.
அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனீசியா, ஜப்பான், மலேசியா, பிலிப்பீன்ஸ், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகியவை துரிதமாக நடவடிக்கைகளை எடுப்பதாக அமெரிக்க அமைச்சர் சொன்னார்.
எனினும் தைவான், நியூசிலாந்தின் பெயர்கள் அதில் இடம்பெறவில்லை.
அண்மை பெய்ஜிங் உச்சநிலை மாநாட்டுக்குப் பிறகு, சீனா குறித்த அமெரிக்காவின் போக்கு ஓரளவு இணக்கமாக மாறியுள்ளது. எந்தவொரு நாடும், சீனா உட்பட, தனது ஆதிக்கத்தைச் செலுத்தி பிற நாடுகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறிக்கு உட்படுத்தாத நிலையான அதிகாரச் சமநிலையைத்தான் அமெரிக்கா விரும்புகிறது என்றும் திரு ஹெக்சேத் தெரிவித்தார்.

