அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டார் ஏமஸ் யீ

தேசியச் சேவையில் சேர்க்கப்படுவதற்கான சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்

அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டார் ஏமஸ் யீ

படம்: இலினோய் சட்ட, ஒழுங்குப் பிரிவு

20 Mar 2026 - 10:48 am

2 mins read

சிறார் பாலியல் குற்றவாளியான ஏமஸ் யீ, அமெரிக்காவிலிருந்து வியாழக்கிழமை (மார்ச் 19) நாடுகடத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்கக் குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்கப் பிரிவு (ஐஸ்) அதனை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் உறுதிப்படுத்தியது.

அரசு நீதிமன்ற இணையத்தளத்தின்படி, யீ மீது சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படும் என்று நம்பப்படுகிறது. தேசியச் சேவையில் சேர்க்கப்படுவதற்கான சட்டத்தின்கீழ் அவர்மீது குற்றஞ்சாட்டப்படும் என்று கருதப்படுகிறது.

27 வயது யீ, அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் புதன்கிழமை தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

சென்ற ஆண்டு (2025) நவம்பர் மாதம்வரை, அவர் அமெரிக்கக் குடிநுழைவு, சுங்கத்துறைப் பிரிவின் தடுப்புக்காவலில் இருந்துவந்தார். அமெரிக்கச் சிறையொன்றிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அவர் அங்கிருக்கிறார்.

நாடுகடத்தப்படுவதற்கான ஆவணங்களில் சென்ற மாதம் 12ஆம் தேதி யீ கையெழுத்திட்டதாக அவரின் ஆதரவாளர்கள் வலைப்பூவொன்றில் குறிப்பிட்டிருந்தனர்.

அண்மை நாள்களில், ‘ஐஸ்’ பிரிவின்கீழ் உள்ள பல்வேறு நிலையங்களுக்கு அவர் மாற்றப்பட்டார்.

யீ நாடு திரும்பினால், தேசியச் சேவையில் சேர்க்கப்படுவதற்கான சட்டத்தின்கீழ் அவர்மீது குற்றஞ்சாட்டப்படும் என்று சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சு சென்ற ஆண்டு நவம்பரில் கூறியிருந்தது.

தேசியச் சேவையில் சேர்வதற்கு முந்திய மருத்துவப் பரிசோதனைக்கு யீ செல்லவில்லை. 2016ஆம் ஆண்டு டிசம்பரில் அடைக்கலம் நாடி அவர் அமெரிக்காவுக்குப் போனார். நாட்டைவிட்டு வெளியேறுவதற்குரிய முறையான அனுமதியின்றி அவர் சிங்கப்பூரிலிருந்து சென்றார்.

தேசியச் சேவையில் சேர்க்கப்படுவதற்கான சட்டத்தை மீறுவோருக்கு $10,000 வரை அபராதமோ மூன்றாண்டு வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தேசிய சேவைஅமெரிக்காசட்டம்அபராதம்சிறைத்தண்டனை