ஏமஸ் யீ பிணையில் விடுவிப்பு

ஏமஸ் யீ பிணையில் விடுவிப்பு

2 mins read
08027d12-c7c5-4e8e-a478-55a7b299ac18
தம் தாயார் மேரி டோவுடன் ஏமஸ் யீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

குழந்தைப் பாலியல் குற்றவாளி ஏமஸ் யீ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏமஸ் யீயின் தாயார் $10,000 பிணைத்தொகையைச் செலுத்தியதை அடுத்து, அவர் சாங்கி சிறைச்சாலையிலிருந்து வியாழக்கிழமையன்று (மார்ச் 26) விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக, காணொளி வழியாக அவர் நீதிமன்ற விசாரணையில் முன்னிலையானார்.

உரிய அனுமதியின்றி அவர் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரைவிட்டு வெளியேறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

27 வயதான ஏமஸ் யீ மார்ச் 19ஆம் தேதியன்று அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டார். அன்றே சாங்கி விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட அவர், அதற்கு மறுநாள் சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் தோன்றினார். அப்போது, படை ஆட்சேர்ப்புச் சட்டத்தின்கீழ் அவர்மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தேசிய சேவை தொடர்பான மருத்துவப் பரிசோதனைக்கு முன்னிலையாக ஏமஸ் யீ தவறிவிட்டதாகவும் உரிய அனுமதியின்றி அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

புகலிடமளிக்கக் கோரி ஏமஸ் யீ, 2016 டிசம்பரில் அமெரிக்கா சென்றார்.

2015 டிசம்பர் 13 முதல் 2016 ஏப்ரல் 19 வரையிலும் பின்னர் 2016 டிசம்பர் 15 முதல் 2026 மார்ச் 19 வரையிலும் அவர் சிங்கப்பூரைவிட்டு வெளியே இருந்தார்.

இடைப்பட்ட காலத்தில் அவர் தேசிய சேவை மருத்துவப் பரிசோதனைக்கு முன்னிலையாகத் தவறியதாகச் சொல்லப்படுகிறது.

கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகக் கருத்துரைத்ததால் சிக்கலில் மாட்டிக்கொண்ட ஏமஸ் யீ, அமெரிக்காவிற்குத் தப்பியோடினார்.

2018 மார்ச்சில் அமெரிக்கா அவருக்குப் புகலிடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கக் குடிநுழைவு, சுங்க அமலாக்கத் தடுப்பு நிலையத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆயினும், குழந்தைப் பாலியல் தொடர்பான காணொளிகளை வைத்திருந்ததற்காக ஈராண்டுகளுக்குப் பிறகு இல்லினாய் நீதிமன்றத்தில் ஏமஸ் யீமீது குற்றம் சுமத்தப்பட்டது. அதன் தொடர்பில் 2021 டிசம்பரில் அவருக்கு ஆறாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் 2023 அக்டோபரில் அவர் நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், அதற்கு அடுத்த மாதமே அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

ஏமஸ் யீ மீதான வழக்கில், வழக்கிற்கு முந்திய கலந்துரையாடல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேசிய சேவை ஆட்சேர்ப்பு விதிகளை மீறுவோருக்கு $10,000 வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள்வரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்