அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்க போதிய கால அவகாசம்: தேர்தல் துறை

2 mins read
0dc8ee19-90a0-4569-9655-995521bb99da
அதிபர் தேர்தலில் போட்டியிடும் முனைப்பிலுள்ள திரு டான் கின் லியன், அத்தேர்தல் விரைவாக நடத்தப்படுவதாகச் சாடியிருந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தகுதிச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கவும் போட்டியிடத் தயாராகவும் போதிய கால அவகாசம் இருப்பதாகத் தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 13ஆம் தேதியிலிருந்தே பெறப்படுகின்றன என்றும் அதற்கான படிவங்கள் தேர்தல் துறை இணையத்தளத்தில் உள்ளது என்றும் தேர்தல் துறை குறிப்பிட்டது.

ஆயினும், முன்கூட்டியே தங்களது விண்ணப்பங்களை அளிக்கும்படி அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோரை அது ஊக்குவிக்கிறது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் இருக்கும் முன்னாள் என்டியுசி இன்கம் தலைமை நிர்வாகி டான் கின் லியன், தம்மைப் பொறுத்தமட்டில், அதிபர் தேர்தலுக்கான கால அவகாசம் குறுகியதாக உள்ளது என்று குறைகூறியிருந்தார்.

ஓய்வுநாள் தவிர்த்து, வேட்புமனுத் தாக்கலுக்கும் வாக்குப்பதிவிற்கும் இடையே பத்து நாள்களே உள்ளன என்றும் தமது செய்தியை மக்களிடம் கொண்டுசேர்க்க அது போதாது என்றும் திரு டான் குறிப்பிட்டிருந்தார்.

அதிபர் தேர்தல் விரைவாக நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்,

இதனைத் தொடர்ந்து, தேர்தல் துறை இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே மக்களையும் ஊடகங்களையும் சென்றடையும் நடவடிக்கைகளில், அதிலும் தகுதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முன்னரே, தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இருப்பதாகத் தேர்தல் துறை குறிப்பிட்டது.

தேர்தல் ஆணை வெளியிட்டபின், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த ஐந்து நாள்களுக்குப் பிறகே, அதாவது வரும் 17ஆம் தேதி தகுதிச் சான்றிதழுக்கான விண்ணப்பக் காலம் முடிவடைவதையும் அது சுட்டிக்காட்டியது.

திரு டானுடன், முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், 66 தொழில்முனைவர் ஜார்ஜ் கோ, 63, முன்னாள் ஜிஐசி தலைமை முதலீட்டு அதிகாரி இங் கோக் சோங், 75 என மொத்தம் நால்வர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்