கரையோரப் பூந்தோட்டத்தின் ரோஸ் ரொமேன்ஸ் மலர் அலங்காரக் காட்சியில் முதல் முறையாக ‘டமாஸ்க் ரோஸ்’ எனப்படும் இளஞ்சிவப்பு நிற ரோஜாக்கள் இடம்பெற்றுள்ளன.
வரலாற்றில் ஆகப் பழைமையான ரோஜா வகைகளில் ஒன்றான இது, பல நூற்றாண்டுகளாக வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. ரோஜாத் தைலம், பன்னீர் போன்றவையும் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோஸ் ரொமேன்ஸ் மலர் அலங்காரக் காட்சி, ஜூன் 2 முதல் 30ஆம் தேதி வரை கரையோரப் பூந்தோட்டத்தின் மலர்க் குவிமாடத்தில் (ஃபிளவர் டோம்) அமைக்கப்பட்டுள்ளது.
இது 70 வகைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 16,000 ரோஜா மலர்களைக்கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள துருக்கியத் தூதரகத்துடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இஸ்பார்ட்டாவின் கறுப்பு ரோஜாக்கள், ‘ஈடன் கிளைம்பர்’ வகை ரோஜாக்கள், லியோனாடோ டா வின்சி வகை ரோஜாக்கள் ஆகியவையும் முதல்முறையாக இடம்பெற்றுள்ளன.
‘டமாஸ்க்’ ரோஜாக்கள் உற்பத்தியில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் துருக்கியும் அடங்கும்.
மலர்க் குவிமாடத்தினுள் வருகையாளர்கள் துருக்கியின் கட்டடக்கலை, ரோமானியப் பேரரசு காலத்திய நீரூற்று என அந்நாட்டின் வரலாற்றைப் பறைசாற்றும் அம்சங்களைக் காணலாம்.