50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய அங் மோ கியோ சமூக மன்றம்

50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய அங் மோ கியோ சமூக மன்றம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Nov 2026 - 5:04 pm

2 mins read

அங் மோ கியோ சமூக மன்றத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) கொண்டாடப்பட்டது. அதில் 1,200க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

உணவு, இசை, ஆரோக்கியமான சமையல் செயல்முறை விளக்கம், முதியோரின் தசை வலிமை, நடமாட்டத்தை மதிப்பிடும் மருத்துவப் பரிசோதனை என பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

பொன்விழா கொண்டாடிய சமூக மன்றம் முதலில் அங் மோ கியோ ஸ்திரீட் 22 வீவக புளோக்கில் செயல்பட்டது. பின்னர் 1981ஆம் ஆண்டில் அங் மோ கியோ அவென்யூ 1 தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.

அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த அமைச்சருமான லீ சியன் லூங் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

“குடியிருப்பாளர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நண்பர்களாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒன்றிணைந்து அக்கறையுடன் செயல்படும் சமூகமாக நாம் திகழ்கிறோம்,” என்று அவர் கூறினார்.

சமூக மன்றத்தின் தொடக்கக் காலத்தில் பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ டூன் சியாவையும் திரு லீ பாராட்டினார். அவரும் பொன்விழாவில் கலந்துகொண்டார்.

அங் மோ கியோ சமூக மன்றம் இப்போது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் எனப் பல அமைப்புகளுடன் இணைந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாக மூத்த அமைச்சர் லீ குறிப்பிட்டார்..

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முதியோருக்கான நினைவுத்திறன், அறிவாற்றல் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என சமூக மன்ற நிர்வாகக் குழுத் தலைவர் டான் டாய் கியாட் தெரிவித்தார்.

சமூக மன்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இளையர்களைத் தலைவர்களாக உருவாக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றார் அவர்.

கம்பத்து உணர்வுடன் கூடிய சமூகத்தை உருவாக்குவதே தங்களது இலக்கு என்றும் திரு டான் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்