மொத்தமுள்ள 18 குழுத்தொகுதிகளில் ஆகப் பெரிய குழுத்தொகுதியான அங் மோ கியோவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
அத்தொகுதிகளில் மூன்று கட்சிகள் போட்டியிடுவது சிங்கப்பூர் வரலாற்றில் இதுவே முதன்முறை.
நடப்பு வெற்றியாளரான மக்கள் செயல் கட்சியை (மசெக) எதிர்த்து சிங்கப்பூர் ஐக்கியக் கட்சியும் மக்கள் சக்திக் கட்சியும் தங்கள் வேட்பாளர்களை அங்கு நிறுத்தியுள்ளன.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங், 73, வழிநடத்தும் மசெக அணியில் கடந்த முறை இடம்பெற்றிருந்த டேரல் டேவிட், 54, நாடியா அகமது சம்டின், 35, புதுமுகங்கள் ஜாஸ்மின் லாவ், விக்டர் லாய், 63, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சிங்கப்பூர் ஐக்கியக் கட்சியைப் பொறுத்தமட்டில், அதன் தலைமைச் செயலாளர் ஆண்டி ஸு, 42, நொராய்னி யூனுஸ், 57, கட்சித் தலைவர் ரிதுவான் சந்திரன், 53, விமானப் பணியாளர் நைஜல் இங், 39, டாக்டர் வின்சென்ட் இங், 52, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மக்கள் சக்திக் கட்சி அங் மோ கியோ குழுத்தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தும் என்று அதன் தலைவர் கோ மெங் செங் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அவ்வகையில், அக்கட்சியின் பொருளாளர் வில்லியம் லிம், 47, ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர் மார்ட்டின் ஹோ, 43, பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தாடியஸ் தாமஸ், 43, தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் சேமுவல் லீ, 33, தோட்டக்கலை நிபுணர் ஹெங் ஸெங் டாவ், 24, ஆகியோர் அங் மோ கியோ குழுத்தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2020 பொதுத் தேர்தலில் மசெக அணி அங்கு 71.91 விழுக்காட்டு வாக்குகளுடன் அக்குழுத் தொகுதியில் வாகை சூடியது. எதிர்த்துப் போட்டியிட்ட சீர்திருத்தக் கட்சிக்கு 28.09 விழுக்காட்டு வாக்குகள் கிடைத்தன.
தொடர்புடைய செய்திகள்
அங் மோ கியோ குழுத்தொகுதியில் மொத்தம் 161,235 வாக்காளர்கள் உள்ளனர். அந்தக் குழுத்தொகுதியின் டெக் கீ வட்டாரத்தைக் கடந்த 41 ஆண்டுகளாகப் பிரதிநிதித்து வருகிறார் மூத்த அமைச்சர் லீ. 20 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்தபின் கடந்த 2024 மே மாதம் அப்பதவியிலிருந்து அவர் விலகியது நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, செம்பவாங் குழுத்தொகுதியிலும் ராடின் மாஸ், பொத்தோங் பாசிர் தனித்தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
செம்பவாங் குழுத்தொகுதியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தலைமையிலான மசெக அணியை எதிர்த்து, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியும் தங்களது அணிகளைக் களமிறக்கியுள்ளன.
ராடின் மாஸ் தனித்தொகுதியில் மசெக வேட்பாளர் மெல்வின் யோங்கை எதிர்த்து, சீர்திருத்த மக்கள் கூட்டணியின் குமார் அப்பாவும் சுயேச்சை வேட்பாளரான டேரல் லோவும் போட்டியிடுகின்றனர்.
பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் அலெக்ஸ் இயோ (மசெக), வில்லியம்சன் லீ (சிங்கப்பூர் மக்கள் கட்சி), லிம் தியென் (சீர்திருத்த மக்கள் கூட்டணி) ஆகியோர் களத்தில் உள்ளனர்.