விலங்கு வதை குற்றச்சாட்டு: சமூக ஊடக பிரபலம் மீது விசாரணை

2 mins read
fc3200a1-f919-4520-843d-d008010b41fe
சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டு பிறகு நீக்கப்பட்ட காணொளியில், ஒருவர் விலங்கை திட்டி வதைப்பது பதிவாகியுள்ளது. - படம்: mermaid.sg / இன்ஸ்டகிராம்

சமூக ஊடகப் பிரபலம் ஒருவர்மீது தேசியப் பூங்காக் கழகம் விலங்கு வதைக் குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டுள்ளது.

இயூனிஸ் இங் என்ற அந்தப் பிரபலம், அவரது இன்ஸ்டகிராம் பதிவில் ஒரு காணொளியை வெளியிட்டு, பிறகு அதனை நீக்கிவிட்டார். அதில் ஒருவர் சிறிய நாய் ஒன்றை வசைபாடிவிட்டு, பிறகு மூன்று முறை அடிப்பது பதிவாகியிருந்தது.

சுவைபானத்தைக் குடித்த அந்த நாயை “நீ ஓர் எலி, அதற்குமேல் ஒன்றுமில்லை,” என்று ஆங்கிலத்தில் ஒருவர் திட்டுவதை அப்பதிவில் கேட்கமுடிந்தது. அவ்வாறு கூறிவிட்டு அந்த நாயை அவர் அடித்தார்.

டிக்டாக், இன்ஸ்டகிராம் செயலிகளில் மெர்மெயிட்.எஸ்ஜி (mermaid.sg) என்ற பெயரில் பிரபலமாக வலம் வரும் இயூனிஸ் இங், குற்றச்சாட்டுகள் எழுந்த பிறகு, சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளார்.

ஆயினும் வியாழக்கிழமை (டிசம்பர் 18) ரெடிட் (Reddit) என்ற சமூக ஊடகத்தில் அந்தப் பதிவுகள் மீண்டும் பதிவிடப்பட்டன. அதன் பயனாளர்கள் அந்த அந்த விலங்கு வதை பற்றி விசாரணை செய்யும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர்.

அதே நாளில் தம்மிடம் பல புகார்கள் செய்யப்பட்டதாக சிங்கப்பூரின் விலங்குவதைத் தடுப்புச் சங்கம் (எஸ்பிசிஏ) தெரிவித்தது. அந்தப் புகார்கள் தேசியப் பூங்காக் கழகத்தின்கீழ் செயல்படும் விலங்குநல மருத்துவச் சேவையிடம் (ஏவிஎஸ்) கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் கூறியுள்ளது.

சமூக ஊடகப் பதிவாளர் விலங்கை வதைத்தது பற்றி அறிந்திருப்பதாக தேசியப் பூங்காக் கழகத்தின் அமலாக்க விசாரணைப் பிரிவு இயக்குநர் ஜெசிக்கா குவெக் குறிப்பிட்டுள்ளார்.

கழகம் விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதை அவர் உறுதிசெய்தார்.

குறிப்புச் சொற்கள்