தேசிய குற்றத் தடுப்பு மன்றம், மோசடி தவிர்ப்பு விளையாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் விளையாட்டாளர்கள் மொத்தமாக 55,000 வெள்ளி ரொக்கம், ஐஃபோன், பிளேஸ்டேஷன் (PlayStation) கருவி உள்ளிட்ட பரிசுகளைப் பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுகளின் மொத்த மதிப்பு 200,000 வெள்ளிக்கும் அதிகமாகும்.
#XiamTheScams என்றழைக்கப்படும் இந்த இணைய விளையாட்டை எஸ்கியுகேஐஐ (Sqkii) எனும் இணைய விளையாட்டு விளம்பர நிறுவனம் உருவாக்கியுள்ளது. தேசிய குற்றத் தடுப்பு மன்றம் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 24) இதனை வெளியிட்டது.
எஸ்கியுகேஐஐ, #HuntTheMouse எனும் பிரபல விளையாட்டை உருவாக்கிய நிறுவனமாகும். அதில் 500,000 வெள்ளி வரையிலான ரொக்கப் பரிசுகளை வெல்ல விளையாட்டாளர்கள் மறைந்திருக்கும் ‘காசுகளை’ கண்டுபிடிக்கவேண்டும்.
#XiamTheScams விளையாட்டு அதிலிருந்து சற்று மாறுபட்டது. இதில் விளையாட்டாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் புள்ளிகளை அதிகரிக்க மோசடிகளில் சிக்காமல் விளையாடவேண்டும்.
இந்த விளையாட்டில் 90 வெவ்வேறு கதைக்களங்களில் நூற்றுக்கணக்கான சூழல்கள் உள்ளன. அவை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை நீடிக்கும்.
முதல் 100 இடங்களைப் பிடிக்கும் விளையாட்டாளர்களுக்கு மொத்தம் 55,000 வெள்ளி வரையிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். முதலிடத்தைப் பிடிக்கும் விளையாட்டாளர் 10,000 வெள்ளியைத் தட்டிச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.