மோசடித் தடுப்பு: மெட்டா, வங்கிகளுக்கிடையே தகவல் பகிர்வுத் தளம்

2 mins read
96515e75-d22a-41e2-90b9-950a924ea3f1
மெட்டாவின் சிங்கப்பூர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் பயிலரங்கு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக ஊடக நிறுவனமான மெட்டா, தானும் சிங்கப்பூர் வங்கிகள் ஆகியவை சேர்ந்து பயன்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்றத் தளம் ஒன்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

மோசடிச் சம்பவங்களைத் தடுப்பது இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.

மோசடிச் செயல்களை மேற்கொள்ளும் கும்பல்களை ஒடுக்கும் நோக்கில் சிங்கப்பூரின் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் மேலும் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ள மெட்டா எண்ணம் கொண்டுள்ளது. இத்தகைய சூழலில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மெட்டாவின் ஏமாற்றுச் செயல் தகவல் பறிமாற்றச் சந்தை (ஃபையர்) என்றழைக்கப்படும் தளம் முதலில் சென்ற ஆண்டு பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் வெளியிடப்பட்டது. அத்தளத்தின் மூலம் வங்கிகள், தங்களிடம் உள்ள மிரட்டல்கள் குறித்த ரகசியத் தகவல்களை மெட்டாவுடன் நேரடியாகப் பகிர்ந்துகொள்ளலாம்.

தொழில்துறைக் குழு ஒன்றின் மூலம் அந்தத் தளத்தை உலகளவில் வெளியிட மெட்டா தயாராய் இருப்பதாக அந்நிறுவனத்தின் சிங்கப்பூர், ஆசியான் வட்டாரங்களுக்கான பொதுக் கொள்கைப் பிரிவுத் தலைவர் கிளாரா கோ வியாழக்கிழமை (ஜூன் 12) ஊடகங்களிடம் தெரிவித்தார். நிதிச் சேவைத் தகவல் பகிர்வு, ஆய்வு நிலையம் (Financial Services Information Sharing and Analysis Centre) என்பது அந்த தொழில்துறைக் குழுவாகும்.

தனது தளங்களில் மோசடிகளுக்கு ஆளாகும் வாடிக்கையாளர்கள் அதுபற்றி தங்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று திருவாட்டி கோ கேட்டுக்கொண்டார். அதேவேளை, ஃபையர் தளத்தின் முலம் மோசடிக்காரர்கள் அல்லது மோசடிகளுக்கு ஆளானோர் குறித்த தகவல்களை மெட்டாவும் பெற முடியும்.

அதுபோன்ற தகவல்களை ஆராய்ந்து மோசடிக்காரர்கள் மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும் என்று திருவாட்டி கோ சுட்டினார். இந்த ஏற்பாடு குறித்த மேல்விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரிட்டனின் நேட்வெஸ்ட், மெட்ரோ வங்கிகளுடன் ஃபையர் தளம் ஆறு மாதகாலத்துக்குச் சோதனையிடப்பட்டது. அப்போது அந்த வங்கிகள் தன்னுடன் பகிர்ந்துகொண்ட 185 இணையத்தளங்களின் வாயிலாக மோசடிக்காரர்கள் நடத்திய கிட்டத்தட்ட 20,000 கணக்குகளை மெட்டா அகற்றியது.

மரினா ஒன் கட்டடத்தில் அமைந்துள்ள மெட்டாவின் சிங்கப்பூர் அலுவலகத்தில் வியாழக்கிழமையன்று நடந்த மோசடித் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவாட்டி கோ பேச்சாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்