யூத எதிர்ப்புச் சம்பவங்கள்: ஒருவரை ஒருவர் மதிக்க சமயக் குழுக்கள் வேண்டுகோள்

2 mins read
c0478db9-88a6-4e75-92cc-52a983282e08
யூத எதிர்ப்புச் சம்பவங்களுக்கு சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அண்மையில் நிகழ்ந்த யூத எதிர்ப்புச் சம்பவங்களால் இங்குள்ள சமூக அமைப்புகள் வருத்தமடைந்துள்ளதோடு ஒருவரையொருவர் மதித்து நடக்க வேண்டுகோள் விடுத்துள்ளன.

சிங்கப்பூரில் பல்வேறு யூத எதிர்ப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக வியாழக்கிழமை (நவம்பர் 6) உள்துறை அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம் தெரிவித்ததைத் தொடர்ந்து சமயக் குழுக்களின் கருத்து வெளிவந்துள்ளது.

உதாரணத்திற்கு, யூத மாணவர்கள் படிக்கும் அனைத்துலகப் பள்ளிகளின் சில கழிவறைகளில் கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் எதிர்ப்பு ஆபாச வாசகங்கள் காணப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

மற்றொரு சம்பவம் அக்டோபர் மாதம் நிகழ்ந்தது.

வாட்டர் லூ ஸ்திரீட்டில் உள்ள யூத வழிபாட்டுத்தலத்திற்கு யூதர்களின் தொப்பி அணிந்து சென்ற ஒருவரை நோக்கி, அவ்வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், ‘பாலஸ்தீனத்தை விடுதலை செய்’ என்று உரக்கக் கத்தினார்.

இந்நிலையில், செசெட்-எல் யூத வழிபாட்டுத் தலத்தில் யூத சமூக உறுப்பினர்களுடன் அமைச்சர் சண்முகம் கலந்து பேசினார்.

அந்நிகழ்வையொட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த இரு சம்பவங்கள் பற்றியும் தெரிவித்தார். யூத எதிர்ப்பு செயல்களை சிங்கப்பூர் சகித்துக்கொள்ளாது என்று அப்போது திரு சண்முகம் குறிப்பிட்டார்.

இனம், சமயங்களுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொருவரும் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்பதை சிங்கப்பூரின் சட்டங்களும் விதிமுறைகளும் உணர்த்துவதாக அவர் கூறினார்.

இணையம் வாயிலாகவும் நேரடியாகவும் யூத சமூகத்தினர் சந்தித்த விரும்பத்தகாத சம்பவங்களைப் பற்றி அவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளவே கலந்துரையாடலுக்கு தாம் சென்றதாகக் கூறிய திரு சண்முகம், பாதுகாப்பற்றவர்களாக அவர்கள் உணர்கிறார்கள் என்றார். இது ஒரு கவலைக்குரிய விவகாரம் என்றும் அவர் கூறினார்.

2023 அக்டோபர் முதல் இஸ்ரேல்-பாலஸ்தீனம் தொடர்பான உலகளாவிய பதற்றங்கள் நீடித்து வரும் நிலையில் இச்சம்பவங்கள் சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளன.

அந்தச் சம்பவங்களை சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமய அமைப்புகள் கண்டித்துள்ளன.

இங்குள்ள யூத சமூகம் எதிர்ப்புகளைச் சந்திப்பது அதிகரித்து வருவதைத் தான் உணர்ந்துள்ளதாக சிங்கப்பூர் பௌத்த சம்மேளனம் வியாழக்கிழமை (நவம்பர் 6) கூறியது.

இதுபோன்ற சம்பவங்கள் சிங்கப்பூர் சமூகத்தில் ஏற்கத்தக்கதன்று என சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்