எஸ்பிளனேட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான பாவனைப் பயிற்சி

எஸ்பிளனேட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான பாவனைப் பயிற்சி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Nov 2026 - 9:21 pm

2 mins read

சிங்கப்பூர்க் காவல்துறை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் பங்கேற்ற ‘ஹார்ட்பீட்’ எனப்படும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும், அவசரகால ஆயத்தநிலைப் பயிற்சி புதன்கிழமையன்று (நவம்பர் 25) எஸ்பிளனேட்-தியேட்டர்ஸ் ஒன் தி பேயில் நடத்தப்பட்டது.

அண்மைய ஆண்டுகளில் இப்பயிற்சியில் ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். மேலும், எஸ்பிளனேட் வளாகத்தில் இத்தகைய பயிற்சி நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும்.

அதிகாலை தொடங்கிய இந்தப் பாவனைப் பயிற்சியில், எஸ்பிளனேடின் கீழ்த்தளப் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த பை ஒன்றைப் பொதுமக்களில் ஒருவர் கண்டறிந்தார். அவர் பாதுகாப்பு அதிகாரியிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அப்பையில் வெடிபொருள்கள் உள்ளனவா எனச் சோதனை செய்யப்பட்டு, அது பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பாவனைப் பயிற்சிக்காக ‘வெடிகுண்டு’ பொருத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தியது. பின்னர், முகமூடி அணிந்த நபர் ஒருவர் தோன்றி, தரையில் காயமடைந்து கிடந்த ஆறு பேரைக் கத்தியால் குத்தினார்.

அவருடன் சக்திவாய்ந்த தாக்குதல் துப்பாக்கிகளை ஏந்திய இரு துப்பாக்கிக்காரர்களும் இணைந்து, எஸ்பிளனேடின் உள்வளாகத்தில் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்ததை அடுத்து, காவல்துறை அதிகாரிகள் அத்துப்பாக்கிக்காரர்களைச் சுட்டு வீழ்த்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அப்பகுதி பாதுகாக்கப்பட்டவுடன், ‘கெவ்லர்’தலைக்கவசங்கள், குண்டுதுளைக்காத கவச உடைகளை அணிந்த சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர்கள் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும், எஸ்பிளனேட்டின் மேல்தளப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. மரினா பே பகுதியை நோக்கிய வெளிப்புறப் பகுதியை மற்ற துப்பாக்கிக்காரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்திருந்தனர். தப்பி ஓடிய பொதுமக்களைக் காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தபோது, தலைக்கவசம் போன்ற முக்காடு அணிந்த நபர் ஒருவர் வெளிப்புறத்தில் தமது தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்தார்.

மூன்று துப்பாக்கிக்காரர்கள் பொதுமக்கள் ஒருவரைப் பிணையாளியாகப் பிடித்து வைத்துக்கொண்டு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதால், பேரளவிலான உயிருடற்சேதச் சூழல் மேலும் குழப்பமானது. கூடுதல் காவல்துறையினர் விரைந்து வந்து பிணையாளியை மீட்டனர். அதேவேளையில், தொண்டூழிய சிறப்புக் காவல்படையினர் அப்பகுதியைப் பாதுகாக்கவும் காயமடைந்தவர்களைப் பரிசோதிக்கவும் உதவினர்.

இப்பயிற்சியை நேரில் பார்வையிட்ட சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், வளாகத்தைப் பாதுகாப்பதற்கான அவசரகால மீட்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்துறைக் குழுவினருக்கும் எஸ்பிளனேட் தரப்பினருக்கும் இடையே இருந்த பயன்முனைப்புமிக்க ஒருங்கிணைப்பைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

115க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ‘ஹார்ட்பீட்’ பயிற்சியில், அவசரகால மீட்புப் படையினர் வருவதற்கு முன்பு பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ‘எஸ்ஜி செக்யூர்’ அமைப்பின் முக்கிய அறிவுரைகளான 'ஓடு, ஒளி, சொல்' மற்றும் 'அழுத்து, கட்டு, சொல்' முதலுதவித் திறன்கள் ஆகியவை செயல்முறைப்படுத்திக் காட்டப்பட்டன.

குறிப்புச் சொற்கள்