அணியிலுள்ள அனைவர்க்கும் முக்கியப் பங்குண்டு: பிரித்தம் சிங்

அணியிலுள்ள அனைவர்க்கும் முக்கியப் பங்குண்டு: பிரித்தம் சிங்

2 mins read
d9fc6cdb-a6ae-45fa-b6e6-363f994165d7
இந்த பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி சார்பில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு இடத்தை உறுதிசெய்வதில் கட்சியின் கவனம் தொடர்ந்து இருப்பதாகவும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் மீண்டும் வலியுறுத்தினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மக்கள் செயல் கட்சி தனது முக்கிய அமைச்சர்களை இழக்க இயலாது என்றும் அக்கட்சி ஒரு காற்பந்துக் குழு போன்றது என்றும் தமது மே தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்த கருத்துகளுக்குப் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் பதிலளித்துள்ளார்.

மசெகவில் பல திறமையான தலைவர்கள் உள்ளதாகக் கூறிய திரு சிங், ஆயினும் எந்த ஓர் அணியிலும் அதில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் முக்கியப் பங்குண்டு எனக் குறிப்பிட்டார்.

“காற்பந்துக் குழுவுடன் ஒப்பிடுவது அவ்வளவு சிறப்பானதன்று,” என்றார் திரு சிங்.

காற்பந்தாட்டத்தில் முதலில் களமிறங்கும் 11 பேரில் மூன்று அல்லது நான்கு விளையாட்டாளர்கள் இயங்க முடியாவிடில், மாற்று விளையாட்டாளர்கள் இருந்தாலும் அந்த அணி சிறப்பாகச் செயல்பட முடியாது என்றும் இதுபோன்ற மாற்றங்கள் நமது அடுத்த அமைச்சரவைக்கு ஏற்படும் ஓர் இழப்பு என்றும் பிரதமர் வோங் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி சார்பில் 26 பேர் போட்டியிடுவதாகவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் ஓர் இடத்தை உறுதிசெய்வதில் கட்சி தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும் திரு சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், பல தொகுதிகளை இன்னும் வழிநடத்தாததால் இந்தத் தேர்தல் களம் பாட்டாளிக் கட்சிக்கு மிக சவாலான ஒன்றாக அமைந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

“எனவே, நமது அரசியல் அமைப்பு மிகவும் சமநிலையானதாகவும் நாடாளுமன்றம் பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் அவர்.

அதிக எதிர்க்கட்சியினரைக் கொண்டுள்ள நாடாளுமன்றம், காரை ஒருவர் ஒட்டிக்கொண்டிருக்கும்போது அதன் இயக்குசக்கரத்தை மற்றொருவரின் கரமும் பற்றி அந்தக் காரை விபத்துக்குள்ளாக்குவதுபோன்றதுதான் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கின் கருத்துக்கும் திரு சிங் மறுமொழியுரைத்தார்.

“இயக்குசக்கரத்தை இயக்குபவராக இருந்தாலும், கார் ஓட்டுநராக இருந்தாலும் இறுதியில் கார் பாதுகாப்பாக செல்லும் இடத்தை அடைய வேண்டும் என்பதே இலக்கு,” என்றார் அவர்.

தொழிலாளர் இயக்கத்திலிருந்து மக்கள் செயல் கட்சி ஒருபோதும் விலகாது என்று வியாழக்கிழமை (மே 1) காலை பிரதமர் வோங் தமது மே தினப் பேரணி உரையில் தெரிவித்தார்.

தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) மசெகவுடன் பல காலம் ஒரு நெருக்கமான உறவை வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட திரு சிங், “இருப்பினும், நாடாளுமன்றத்தில் பொதுச் செயலாளர் இல்லாத நிலையில், என்டியுசி செயலற்றதாக இருக்கக்கூடாது என்பதே என் கருத்து,” என்றார்.

குறிப்புச் சொற்கள்