பொட்டல விநியோக நிறுவனம் அல்லது சிங்ஹெல்த் பலதுறை மருந்தகத்திலிருந்து வருவது போன்ற குறுஞ்செய்தி ‘ஆப்பிள் ஐமெசேஜ்’ தளத்தில் வந்தால், எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தகைய குறுஞ்செய்திகளால், அக்டோபர் 31ஆம் தேதிமுதல் குறைந்தது $31,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறை சனிக்கிழமை (நவம்பர் 14) வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்தது.
அந்த மோசடிகளில், அங்கீகரிக்கப்பட்ட பொட்டல விநியோக நிறுவனங்களிடமிருந்து வருவது போன்ற குறுஞ்செய்திகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். முழுமையற்ற விநியோகத் தகவல்கள் காரணமாகப் பொட்டல விநியோகம் செய்யப்பட முடியவில்லை என்று அந்தக் குறுஞ்செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு, நிலுவையில் உள்ள வெளிநோயாளி மருத்துவக் கட்டணங்கள் இருப்பதாகக் கூறி, சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களிலிருந்து வருவது போன்ற குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்.
அத்தகைய குறுஞ்செய்திகளில் உள்ள மோசடி இணைப்புகள், பெறுநர்களின் தனிப்பட்ட, வங்கி அல்லது கடன் அட்டைத் தகவல்களைப் பெறுவதற்காகவோ பணம் செலுத்துமாறு கோருவதற்காகவோ போலி இணையத்தளங்களுக்கு அவர்களை இட்டுச்செல்லும் என்று காவல்துறை தெரிவித்தது.
இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று அது பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொட்டல விநியோகம் தொடர்பான குறுஞ்செய்திகள், இணைப்புகள் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை ‘ஸ்கேம்ஷீல்ட்’ செயலி மூலமாகவோ சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாகவோ சரிபார்க்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
