தங்களின் மின்னிலக்க சாதனங்களை இணைய ஊடுருவிகள் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க தனது இயங்குதள மென்பொருளைப் புதுப்பித்துக்கொள்ளும்படி ஆப்பிள் சாதனப் பயனர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
தங்கள் சாதனங்கள் ஊடுருவப்படுவதற்கு வகைசெய்யும் குறைபாடுகளைச் சரிசெய்யும் நோக்கில் மேம்பாட்டுக் கூறுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 28) ஆலோசனை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. குறைபாடுகள் சரிசெய்யப்படாவிட்டால் ஊடுருவிகளால் பாதிக்கப்பட்ட சாதனங்களில் உள்ள தனிப்பட்ட தகவல்களைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதோடு, பயனர்களுக்குத் தெரியாமலேயே ஊடுருவிகளால் அவர்களின் ஆப்பிள் சாதனங்களில் தீங்குநிரல்களைப் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
இவ்வாண்டு காணப்பட்டுள்ள முதல் ‘ஸீரோ-டே’ (zero-day) குறைபாட்டைச் சரிசெய்ய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிளீப்பிங் கம்பியூட்டர் (Bleeping Computer) தொழில்நுட்ப ஊடகம் தெரிவித்தது. ‘ஸீரோ-டே’ குறைபாடு, ஒரு சாதனத்தின் மென்பொருளை உருவாக்கிய நிறுவனத்துக்கே தெரியாத ஒன்றாகும்.
அந்தக் குறைபாட்டை ஊடுருவிகள் ஏற்கெனவே தவறாகப் பயன்படுத்திவிட்டதாக நம்பப்படுகிறது.