ஐஃபோனை ஐபோனை ஒரு தொடர்பில்லாப் பணம் செலுத்தும் கருவியாகப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்த வகைசெய்யும் ‘டேப் டு பே’ அம்சத்தை இப்போது சிங்கப்பூரிலும் பயன்படுத்தலாம் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டணம் செலுத்தப் பயன்படுத்தப்படும் தளங்கள், செயலிகளை உருவாக்குவோர், கட்டணக் கட்டமைப்புகள் ஆகிய தரப்பினருடன் இணைந்து செயல்பட்டு ‘டேப் டு பே’ வசதியை சிங்கப்பூருக்கும் கொண்டு வந்திருப்பதாக ஆப்பிள் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) அறிக்கையில் தெரிவித்தது.
இதன் மூலம் சிறிய, பெரிய என எல்லா வகை நிறுவனங்களும் தொடர்பில்லா கட்டண முறைகளின் மூலம் கட்டணங்களைப் பெற முடியும். ஐஃபோன்களை மட்டும் வைத்து வங்கிக் கடன் அட்டைகளைப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்துவது, ஆப்பிள் பே உள்ளிட்ட மின்னிலக்கப் பணப்பைகளின்வழி கட்டணம் செலுத்துவது ஆகியவற்றுக்கு இது பொருந்தும். ஐஓஎஸ் செயலிச் சந்தையில் ஐஃபோனுடன் இணைந்து செயல்படும் செயலி இருந்தால் போதும் என்று ஆப்பிள் குறிப்பிட்டது.
ஏட்யென், ஃபியூ, ஹிட்பே, ரெவலியுட், ஸ்டிரைப், ஸோஹோ ஆகியவைதான் முதலில் ஐஃபோன்களில் ‘டேப் டு பே’ சேவையை வழங்குகின்றன. 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிராப் நிறுவனமும் இந்த ஏற்பாட்டில் சேர்ந்துகொள்ளும் என்று ஆப்பிள் தெரிவித்தது.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஜேசிபி, மாஸ்டர்கார்ட், யூனியன்பே, விசா ஆகியவற்றின் தொடர்பில்லா கடன், டெபிட் அட்டைகளை வைத்தும் ‘டேப் டு பே’ வசதி மூலம் கட்டணம் செலுத்தலாம்.
வாடிக்கையாளர்களின் கட்டணம் சார்ந்த தகவல்கள், ஆப்பிள் பே பயன்படுத்தும் அதே தொழில்நுட்ப முறையால்தான் பாதுகாக்கப்படுகின்றன என்று ஆப்பிள் தெரிவித்தது. ஃபோன்களில் ‘டேப் டு பே’ மூலம் இடம்பெறும் பரிவர்த்தனைகள் குறிப்பு மொழியாக (encrypted) மாற்றப்பட்டு பாதுகாக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.

