வேட்புமனுத் தாக்கல் நாளான ஏப்ரல் 23ஆம் தேதியிலிருந்து கட்சிகள் தேர்தல் பேரணி நடத்துவதற்கான இடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
வேட்பாளர்கள் தேர்தல் பேரணி நடத்த காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஓர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் தேர்தல் பேரணி நடத்த விண்ணப்பம் செய்தால் குலுக்கல்முறை பின்பற்றப்படும்.
தேர்தல் பேரணி இடங்கள், தேர்தல் முடிவுகளுக்குக் காத்திருக்கும்போது கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடும் இடங்கள், தேர்தல் பிரசார முழக்கங்கள் தாங்கிய வாகனங்கள் பயன்பாடு தொடர்பான விவரங்களைக் காவல்துறை புதன்கிழமை (ஏப்ரல் 16) வெளியிட்டுள்ளது.
வரும் மே 3ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. மொத்தமுள்ள 33 தொகுதிகளில் 97 எம்.பி. இடங்களுக்காகக் கட்சிகள் போட்டியிடவுள்ளன.
தேர்தல் பிரசாரக் காலகட்டத்தின்போது விளையாட்டரங்குகளிலும் திறந்தவெளிகளிலும் பேரணிகளை நடத்தலாம்.
கடந்த 2020 பொதுத் தேர்தலின்போது கொவிட்-19 தொற்று காரணமாக நேரடிப் பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வேட்பாளர்கள் தேர்தல் கூட்டங்களை நடத்தலாம் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கல் நடைமுறைகள் முடிந்தபின் தேர்தல் பேரணி இடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படும். கடந்த 2011 பொதுத் தேர்தலின்போது 41 இடங்களும் 2015ல் 46 இடங்களும் தேர்தல் பேரணிக்கென ஒதுக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
விளையாட்டரங்குகளுக்கான வாடகை $1,647 முதல் தொடங்குகிறது. திறந்தவெளிகளில் பேரணி நடத்த விரும்பினால் குறைந்தபட்சம் $109 செலுத்த வேண்டும்.
வேட்புமனுத் தாக்கலுக்கு மறுநாள் ஏப்ரல் 24ஆம் தேதி தேர்தல் கூட்டங்கள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை 23ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பிரசாரக் காலத்தின் மற்ற நாள்களைப் பொறுத்தமட்டில், முதல்நாள் பிற்பகல் 2.30 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
வெளிப்புறப் பேரணி இடங்களில், பேரணி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பிருந்தும் பேரணி நடந்தபின் ஒரு மணி நேரத்திற்கும் ஆளில்லா வானூர்தி, பட்டம், பலூன் ஆகியவற்றைப் பறக்கவிட அனுமதியில்லை.
தேர்தல் முடிவுகளுக்காகக் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த விவரங்கள் பிரசார ஓய்வு நாளான மே 2ஆம் தேதியன்று அறிவிக்கப்படும்.

