இந்து அறக்கட்டளை வாரியம், இந்து ஆலோசனை வாரியங்களின் நியமனங்கள்

இந்து அறக்கட்டளை வாரியம், இந்து ஆலோசனை வாரியங்களின் நியமனங்கள்

2 mins read
0a354594-3109-43f0-bae1-94632c5e419a
இந்து அறக்கட்டளை வாரியம், நான்கு இந்து கோவில்களான ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், ஸ்ரீ சிவன் கோவில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவில் ஆகியவற்றை நிர்வகிக்கிறது. - படம்: இந்து அறக்கட்டளை வாரியம்

இந்து அறக்கட்டளை வாரியம், இந்து ஆலோசனை வாரியம் ஆகியவை ஜூன் 1ஆம் தேதி முதல் தங்கள் வாரியங்களுக்குப் புதிய நியமனங்களை அறிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 5) வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த உறுப்பினர்கள் சமூக சேவை, கல்வி, வர்த்தகம், இளையர் மேம்பாடு, சமூக சேவைகள், சமய விவகாரங்கள் ஆகிய துறைகளில் பரந்த அளவிலான அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டுள்ளனர் என்று இந்து அறக்கட்டளை வாரியம் கூறியுள்ளது.

இவர்களை, கலாசார, சமூக, இளையர்துறைக்கான தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ நியமித்துள்ளார்.

வாரியங்களுக்கு நியமனம் பெற்றவர்கள் 2026, ஜூன் 1ஆம் தேதி முதல் 2029, மே 31ஆம் தேதி வரை பொறுப்பு வகிப்பார்கள்.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் புதிய தலைவராக சேகரன் கிருஷ்ணன், துணைத் தலைவராக பாலகிருஷ்ணா மதுபாலா, செயலாளராகக் கந்தவேல் பெரியசாமி, பொருளாளராக ராமநாதன் பெரியக்கருப்பன், இதர உறுப்பினர்களாக சந்திரசேகர் பழனிச்சாமி, சின்னையா குணசேகரன், ரமேஷ் செல்வராஜ், ரன்விர் குமார் சிங், டி.ஜி. கிரிதரன், சிவகுமரன் சாத்தப்பன், சாமிநாதன் மலையாண்டி, பாஸ்கரன் அம்பிகாபதி ஆகியோர் நியமனம் பெற்றுள்ளனர்.

அதே காலகட்டத்தில் இந்து ஆலோசனை வாரியத்துக்கும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தலைவராக செங்குட்டுவன் கண்ணியப்பன், துணைத் தலைவராகக் கண்ணா கண்ணப்பன், செயலாளராக வளத்தம்மை முத்துபழனியப்பன், இதர உறுப்பினர்களாக சந்திரமோகன் மருதன், ராஜகாந்த் ராமன், எம். பிரேமிக்கா, சுரேஷ்குமார் தங்கவேலு, ஸ்நேகந்த் குப்தா, கார்த்திக் ராமசாமி, சசிகலா கிருஷ்ணன், சிவக்குமரன் கோவிந்தசாமி ஆகியோர் சேவையாற்றுவார்கள்.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் சேகரன் கிருஷ்ணன், இந்த நியமனங்களை வரவேற்றதோடு புதிய உறுப்பினர்களின் பங்களிப்புகளில் நம்பிக்கை தெரிவித்தார்.

“பக்தர்களுக்கான சேவைகளை மேம்படுத்துதல், இளையர் ஈடுபாட்டை வலுப்படுத்துதல், சமூக நலப் பணிகளை விரிவுபடுத்துதல், நிலைத்தன்மை முன்னெடுப்புகளை முன்னெடுத்துச் செல்லுதல் ஆகியவை வாரியத்தின் முக்கிய முன்னுரிமைகளாக அமையும்,” என்று அவர் அந்த அறிக்கையில் கூறினார்.

இந்து அறக்கட்டளை வாரியம் நிர்வகிக்கும் நான்கு கோயில்களின் நிர்வாகக் குழுக்களும் அமைச்சின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
இந்து அறக்கட்டளை வாரியம்சமூக சேவைநம்பிக்கை