கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இவ்வாண்டின் சிங்கே அணிவகுப்பைத் தொடர்ந்து திங்கட்கிழமை (மார்ச் 16) 40க்கும் மேற்பட்டோருக்கு அதிபர் மாளிகையில் ஒரு மதிய விருந்து உபசரிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பங்கேற்பாளர்கள், நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள், தொண்டூழியர்களை அதிபர் தர்மன் சண்முகரத்தினம் சந்தித்துப் பாராட்டினார்.
வந்திருந்த நன்கொடையாளர்கள், ஆதரவாளர்களுக்குப் பாராட்டுச் சின்னங்களையும் அதிபர் தர்மன் வழங்கினார்.
அவருடன் தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது விருந்து உபசரிப்பில் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார்.
அணிவகுப்பின் வெற்றிக்கு கைகொடுத்த கிட்டத்தட்ட 1,000 தொண்டூழியர்களின் அர்ப்பணிப்பைப் பற்றித் திரு ஸாக்கி சுட்டிக்காட்டினார்.
“வயது, இனம், மொழி, மதம் பாராது எல்லா மக்களையும் ஒன்றிணைப்பது சிங்கே அணிவகுப்பின் சிறப்பம்சமாகும்,” என்று அவர் கூறினார்.
அத்துடன், நற்பணிப் பேரவை, மெஸ்ரா (MESRA) போன்ற சமூக அமைப்புகளின் தொடர்ந்த பங்களிப்பு, அதனால் வலுவாகும் சமூகப் பிணைப்பு பற்றியும் எடுத்துக் கூறினார் திரு ஸாக்கி.
அணிவகுப்பில் நற்பணிப் பேரவை 160 தொண்டூழியர்கள் பங்கேற்ற அனுபவத்தை நினைவுகூர்ந்தார் பேரவைத் தலைவர் ரவீந்திரன் கணேசன்.
தொடர்புடைய செய்திகள்
“இதற்குமுன் சிங்கே அணிவகுப்பில் பங்கேற்க கிட்டத்தட்ட 4,000 தொண்டூழியர்கள் விண்ணப்பித்தனர்,” என்றார் அவர்.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து வாரந்தோறும் நேரம் ஒதுக்கித் தொண்டூழியர்கள் பயிற்சி செய்த அனுபவத்தை தமிழ் முரசிடம் திரு ரவீந்திரன் குறிப்பிட்டார்.
“இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த மேலும் பலர் எதிர்காலச் சிங்கே அணிவகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்பதே என் ஆசை,” என்று அவர் தெரிவித்தார்.

