அரவி: உணர்வோடு கலந்த அரபுத்தமிழ்

அரவி: உணர்வோடு கலந்த அரபுத்தமிழ்

3 mins read
cdd13397-df2f-4dee-9c5c-e119da65666d
அரபுத்தமிழ் எனப் பொருள்படும் ‘அரவி’ எழுத்துரு. - படம்: செய்யது இப்ராகிம்
multi-img1 of 3

பல தலைமுறைகளாக, இஸ்லாமியச் சமயநெறிகளை வழுவாமல் பின்பற்றிவரும் தமிழ் முஸ்லிம் சமூகத்தினர், தனித்துவமிக்க தங்கள் வாழ்க்கைமுறையுடன் தமிழையும் இணைத்து அம்மொழிக்குப் புதிய பரிணாமத்தை அளித்தனர்.

பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் எனப் பல்வேறு எழுத்துருக்களில் ஏடுகளில் தோற்றம் கண்டுள்ள தமிழை அரபு எழுத்துருக்களாலும் எழுத முடியும். அரபுத்தமிழ் எனப் பொருள்படும் ‘அரவி’ என்பதே அந்த எழுத்துமுறையின் பெயர்.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் மதரசா சமய, அறநெறிக் கல்விப் பிரிவைச் சேர்ந்த உஸ்தாத் மில்லத் இஸ்மாயில், அரவி எழுதக் கற்றுத்தேர்ந்ததோடு நின்றுவிடாமல் அதனைப் பிறர்க்கும் கற்பித்து வருகிறார்.

‘அரவி’ (Arwi) எனப்படும் அரபுத் தமிழ் மொழிக்கு வரலாற்றுத் தொன்மை மட்டுமன்றி, நடைமுறைப் பயன்பாட்டிலும் உள்ள முக்கியத்துவம் பற்றியும் திரு மில்லத் இஸ்மாயில் விவரித்தார்.

“பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், மிளகு, கிராம்பு போன்ற நறுமணப் பொருள்களைக் கொள்முதல் செய்வதற்காகவும் விற்பனைக்காகவும் அரபு வணிகர்கள் இலங்கை, தமிழ்நாட்டின் காயல்பட்டினம், கீழக்கரை போன்ற தென்னிந்தியக் கடலோரப் பகுதிகளுக்கு வந்தனர்.

“அப்போது, அரபு நாட்டவர் அரபியிலும், உள்ளூர் மக்கள் தமிழிலும் பேசியதால் ஏற்பட்ட மொழிக் குழப்பத்தைத் தீர்க்க, இருதரப்பினருக்கும் பொதுவான ஒரு பாலமாக இந்த மொழி உருவானது,” என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களான முஸ்லிம்கள் குர்ஆனுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்ததால், அவர்களுக்குத் தமிழ் கற்பிப்பதற்காகவும் ‘அரவி’ பயன்பட்டதாகத் திரு மில்லத் கூறினார்.

குறிப்பாக, உச்சரிப்புக் குழப்பங்களைக் களைய இந்த எழுத்துருக்கள் துணைநிற்பதாக அவர் சுட்டினார்.

அரபு மொழியைப் பொறுத்தவரை, அதன் உச்சரிப்புகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்த திரு மில்லத், உச்சரிப்பு சிறிதளவு மாறினாலும், அர்த்தம் தவறாக மாறும் ஆபத்து உள்ளது என்றார்.

“எடுத்துக்கட்டாக, அரபியில் ‘கல்ப்’ (Qalb) என்று சரியாக உச்சரித்தால் ‘உள்ளம்’ என்று பொருள் வரும். ஆனால், அதனை வேறு விதமாக, தவறுதலாக ‘கல்ப்’ (Kalb) என்று உச்சரித்துவிட்டால் அந்தச் சொல்லின் பொருள் ‘நாய்’ என்று அர்த்தம் மாறிவிடும். இதுபோன்ற பிழைகளைத் தவிர்க்கவே அரபுத்தமிழ் பெரிதும் உதவியது,” என்று அவர் கூறினார்.

அரபுமொழியில் உள்ள 28 எழுத்துகளையும், தமிழில் உள்ள 247 எழுத்துகளையும் ஒருங்கிணைக்க, அரபுத்தமிழில் 12 புதிய எழுத்துகள் உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழில் உள்ள ‘ர’, ‘ற’, ‘ஞ’, ‘ப’ போன்ற ஒலிகளை அரபுமொழியில் நேரடியாக எழுதுவதற்கு வாய்ப்புகள் இல்லாததால், அரபி எழுத்துகளின் மேலும் கீழும் இடப்படும் அகரம், உகரம் போன்ற குறியீடுகளில் சிறிய மாற்றங்களைக் கொண்டுவந்தனர் என்றும் திரு மில்லத் விளக்கினார்.

“எடுத்துக்காட்டாக, ‘இஞ்சி’ போன்ற சொற்களில் வரும் ‘ஞ’ ஓசையைக் குறிக்க, அரபுமொழியில் உள்ள ‘நூன்’ எழுத்தின் கீழே மூன்று புள்ளிகளை வைத்துப் பயன்படுத்தினார்கள்,” என்றார் அவர்.

பத்தாம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் முறையான பள்ளிக்கூடங்கள் இல்லாத நிலையில், பாமர மக்களுக்கும் சிறுவர்களுக்கும் கல்வியையும் சமயப் போதனைகளையும் கற்றுக் கொடுக்க அரவி பேருதவியாக இருந்திருக்கும் என்றும் அவர் சொன்னார்.

அறிவுக்கும் உணர்வுக்கும் பொருந்தும்

கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாக இஸ்லாமியக் கல்வியில் ஈடுபட்டுள்ள திரு மில்லத், தம்முடைய மாணவர்களுக்கு அரபுத்தமிழில் பாடம் கற்பிப்பதாகக் கூறுகிறார்.

சிறுவர்களுக்கு இஸ்லாமிய நெறிமுறைகளைக் கற்பிக்க ‘ஸிம்து சிப்யான்’ என்ற சிறிய புத்தகம் பயன்படுத்தப்படுகிறது. எவ்வாறு தொழுகையை (சலா) நிறைவேற்ற வேண்டும், எப்படி அங்கசுத்தி (வுது) செய்ய வேண்டும் போன்றவை குறித்து அது தெளிவாக எடுத்துரைக்கிறது.

தொடக்கத்தில் அதைக் கற்கப் பிள்ளைகள் சற்றுச் சிரமப்பட்டாலும் கற்ற பின்னர் அதுவே பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி தரும் என்று திரு மில்லத் கூறுகிறார்.

அரபுக்கும் தமிழுக்கும் உள்ள நீண்ட பாரம்பரியத் தொடர்பை விளக்கும் அவர், கிட்டத்தட்ட 500 தமிழ்ச் சொற்கள் அரபியிலும், அரபுச் சொற்கள் தமிழிலும் பயன்படுத்தப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கில், 2016ஆம் ஆண்டு சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் சார்பாக ஒரு சிறப்புப் பயிலரங்கம் நடத்தப்பட்டதையும் திரு மில்லத் குறிப்பிட்டார்.

மொழியைத் தாண்டி, தமிழ் முஸ்லிம் மக்களுடன் ‘அரவி’ முற்காலத்தில் உணர்வுபூர்வமாகக் கலந்ததையும் எடுத்துக்காட்டுவழி அவர் சுட்டினார்.

முற்காலத்தில் கடுமையான வறட்சிக் காலங்களில், ஊர் மக்கள் பள்ளிவாசலில் இமாம் தலைமையில் ஒன்றுகூடி மழைகேட்டு ‘முனாஜாத்’ பாடுவார்கள். ‘ஸல்லியன் வ ஸல்லிமன்னவ பாரி கண்ண முஹம்மதா’ எனத் தொடங்கும், அரபுத்தமிழில் அவர்கள் பாடிய பாடல்களைத் திரு மில்லத் நினைவுகூர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்