சுங்கை பூலோ ஈரநிலக் காப்பகத்தில் ‘த பாஸ்’ (The Boss) என அழைக்கப்படும் 3 முதல் 4 மீட்டர் நீளமுள்ள கடல்நீர் முதலை ஒன்று காணப்படுகிறது.
அந்தக் காப்பகத்தில் ஓராண்டுக்கு முன்பு காணாமல் போன ‘டெய்ல்-லெஸ்’ முதலையை இது விரட்டியடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சிங்கப்பூரின் பெரும்பாலான முதலைகள் வாழும் சுங்கை புலோவில் ஒரே நேரத்தில் 20 முதலைகள்வரை இருக்கும். கிராஞ்சி நீர்த்தேக்கம், செந்தோசா, கெப்பல் பே ஆகிய இடங்களிலும் அவை அவ்வப்போது தென்படுகின்றன.
முதலைகளைக் கண்காணிப்பதும் பார்வையாளர்களைப் பாதுகாப்பதும் மிகவும் சவாலாக இருப்பதாகத் தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது.
அதனையடுத்து, முதலை மேலாண்மை முறைகளை மேம்படுத்த ஆஸ்திரேலியா, சரவாக், புருணை, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்ற முதல் வட்டாரப் பயிலரங்கைத் தேசியப் பூங்காக் கழகம் அக்டோபர் 26ஆம் தேதி சுங்கை புலோவில் நடத்தியது.
மேற்குறிப்பிட்ட நாடுகளில் முதலைத் தாக்குதல்களால் பலர் உயிரிழந்தனர்.
முதலைகளுக்குத் தாம் பிடிபட்ட இடத்திற்கே திரும்பிச் செல்லும் உள்ளுணர்வு அதிகம்.
எனவே, செந்தோசா அல்லது ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் பிடிபடும் முதலைகளைச் சுங்கை புலோவில் விட முடியாது எனத் தேசியப் பூங்காக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, 2026 மே 6ஆம் தேதி செந்தோசா கோவ் கடற்பகுதியில் பிடிபட்ட 2 மீட்டர் முதலை கருணைக் கொலை செய்யப்பட்டது.
முதலைகள் நீருக்குள் ஒரு மணி நேரம்வரை மூச்சடக்கி இருக்கும். நிலத்தில் மணிக்கு 17 முதல் 18 கிலோமீட்டர் வேகத்தில் பாயும்.
எனவே, பார்வையாளர்கள் தடுப்பு வேலிகளைத் தாண்டாமல், எச்சரிக்கைப் பலகைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், முதலைகளைக் கண்டால் கழகத்தின் விலங்கு மீட்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறு அது கேட்டுகொண்டுள்ளது.
