முப்படை ஒருங்கிணைப்பில் சீறும் கவச வாகனங்கள்

முப்படை ஒருங்கிணைப்பில் சீறும் கவச வாகனங்கள்

1 of 5
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Nov 2026 - 6:13 am

2 mins read

‘ஏஎச்-64டி அப்பாச்சி’ போர் ஹெலிகாப்டர்களின் இரைச்சலுக்கும் ‘பயோனிக்ஸ்’ காலாட்படைப் போர் வாகனங்களிலிருந்து (Bionix IFV) கிளம்பிய பீரங்கி முழக்கங்களுக்கும் இடையே, சிங்கப்பூர் ஆயுதப்படையின் (எஸ்ஏஎஃப்) தேசிய சேவை வீரர்கள் தங்களின் கூட்டுப் போர்த்திறனை ஆஸ்திரேலியாவின் ஷோல்வாட்டர் பே பயிற்சித் திடலில் முனைப்புடன் வெளிப்படுத்தினர்.

செப்டம்பர் 6 முதல் நவம்பர் 2 வரை நடைபெறும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் மாபெரும் வெளிநாட்டுப் போர்ப்பயிற்சியான ‘வாலபி 2026’ல், தரைப்படை, சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படை (ஆர்எஸ்ஏஎஃப்), மின்னிலக்க, புலனாய்வுச் சேவை (டிஐஎஸ்) ஆகியவற்றைச் சேர்ந்த 6,000 வீரர்களும் 1,200 போர்த் தளவாடங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இப்பயிற்சியில், கவச வாகன நேரடி துப்பாக்கிச்சூட்டு முறை (ALFS) வழியாக நேரடித் துப்பாக்கிச்சூடு நடத்தும் முதல் தேசிய சேவை கவசப் படைப்பிரிவாக ‘408 எஸ்ஏஆர்’ சாதனை படைத்துள்ளது. 

அப்படைப்பிரிவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500 வீரர்கள் அக்டோபர் 20 முதல் நவம்பர் 2 வரை பயிற்சியில் பங்கேற்று வருகின்றனர்.

இருதரப்பு நம்பிக்கையே அடிப்படை வலிமை

சிங்கப்பூரில் இடநெருக்கடி காரணமாக இத்தகைய முழுமையான கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வது கடினம் என்று 408வது சிங்கப்பூர் கவசப் படைப்பிரிவின் துணைப் படைப்பிரிவுத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் (என்எஸ்) சதீஷ்குமார், 39, குறிப்பிட்டார்.

எனவே,  ஆஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பில் ஆகாயப்படையுடனும் ராணுவப் பொறியியல் குழுவுடனும் இணைந்து செயல்படுவதன்வழி போருக்கான தயார்நிலையை வலுப்படுத்துவதாக அவர் கூறினார்.

“திட்டமிடலும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நம்பிக்கையும்தான் இத்தகைய கூட்டு நடவடிக்கைகளின் வெற்றிக்கு அடிப்படை,” என்றார் திரு சத்தீஷ்.

படைப் பாதுகாப்பும் சகோதரத்துவமும்

முன்னேறிச் செல்லும் தரைப்படையினருக்கு வான்வழிக் கவசமாகவும் நெருக்கடிகால உதவி ஆதரவாகவும் செயல்படும் ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர்களும் இந்தப் பயிற்சிக் களத்தில் இணைந்துள்ளன.

இணைப்பு, தகவல் பரிமாற்றம், ‘சி4’ உட்கட்டமைப்பை மின்னிலக்க, புலனாய்வுச் சேவை சீராக வழங்கி முப்படைகளின் கூட்டுப் போர் உத்தியை முழுமைப்படுத்தியது.

தரைப்படைக்கு மிக அருகிலிருந்து வான்வழியாக ஆதரவு தரும்போது, சொந்தப் படையினர் மீதே தவறுதலாகக் குண்டு விழுந்துவிடாமல் தடுப்பதே தலையாய சவால் என்கிறார் அப்பாச்சி ஹெலிகாப்டர் விமானி லெப்டினன்ட் டான் யாவ் பின். 

முன்கூட்டிய திட்டமிடுதலாலும் துல்லியமான தகவல் தொடர்பாலும் இரு படைகளும் ஒத்திசைவுடன் செயல்பட முடிவதாகவும் பயிற்சி வெற்றிகரமாக நிறைவுபெறும் தருணம் படைகளுக்கு இடையிலான சகோதரத்துவ உணர்வை உறுதிப்படுத்துவதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்