தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெவ்வேறு அரசாங்கச் சேவைகளை ஒன்றிணைக்க ஏற்பாடு

2 mins read
24cbdf95-d55a-44b9-bdc9-0276f95c437e
செய்தியாளர் சந்திப்பில் (இடமிருந்து) திரு சான் சுன் சிங், துணைப் பிரதமர் கான் கிம் யோங், பிரதமர் லாரன்ஸ் வோங், திரு கா.சண்முகம், திரு ஓங் யி காங். - படம்: சாவ் பாவ்

மூன்று ஒருங்கிணைப்பு அமைச்சர்களின் பொறுப்புகளில், திரு சான் சுன் சிங்கின் பொதுச் சேவைகள் பொறுப்பு புதியது.

பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக திரு சானின் புதிய பொறுப்பு குறித்து கேட்கப்பட்டது. முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் முன்பு தலைமை தாங்கிய உள்கட்டமைப்பு வசதிகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து இது பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகப் பிரதமர் வோங் விளக்கினார். இப்பொறுப்புக்குப் புதிய கவனமும் முன்னுரிமையும் அளிக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

பெரிய அளவிலான உள்கட்டமைப்புக்குத் திட்டமிடுதலைவிட பொதுச் சேவைகள் குறித்த இரு அம்சங்களுக்கு மேம்பாடு தேவைப்படுவதாகத் தாம் கருதியதால் இப்புதிய பொறுப்பு குறித்து தாம் முடிவெடுத்ததாகப் பிரதமர் வோங் விவரித்தார்.

தமது பொறுப்பின்கீழ், நேரடிச் சேவைகளுக்கு அப்பாற்பட்டு மின்னிலக்கச் சேவைகளுக்குத் திட்டமிடுவதிலும் அவற்றைச் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்போவதாக திரு சான் குறிப்பிட்டார்.

பொதுச் சேவை வழங்கப்படும் விதத்தை உருமாற்றுவதில் புதிய செயல்முறைகளை ஒன்றுதிரட்டுவதும் இதில் அடங்கும் என்பதை அவர் சுட்டினார்.

அரசாங்கம் அதன் மின்னிலக்கச் சேவை உள்கட்டமைப்புகளைக் கட்டியெழுப்புவதில், அதை முன்னெடுத்துச் செல்லக்கூடிய திட்டமிடுதல் அம்சமும் உள்ளதாக அவர் சொன்னார்.

அமைச்சரவை மாற்றங்களின்கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு பொறுப்பு, வர்த்தக, தொழில் அமைச்சின்கீழ் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருக்கானது.

மனிதவள அமைச்சராகத் தொடரும் டாக்டர் டான் சீ லெங், இப்பொறுப்பை ஏற்பார். வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சராகவும் அவர் தற்போது உள்ளார்.

இப்புதிய பொறுப்பு, சிங்கப்பூர் பொருளியலின் முக்கிய அம்சங்களை உள்ளடக்குவதாக பிரதமர் வோங் கூறினார். எரிசக்தி, குறிப்பாக தூய எரிசக்தி, தமது அரசாங்கப் பணியின் முக்கிய அங்கமாக விளங்கும் என்றார் அவர்.

இப்புதிய பொறுப்பின் மூலம், தூய எரிசக்திக்கு மாறுவதை வேகப்படுத்துவதற்கு தன்னை எவ்வாறு தகவமைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் பொறுப்புக்கான தமது முன்னுரிமைகளை திரு ஓங் யி காங் பட்டியலிட்டார். ‘முன்னேறும் சிங்கப்பூர்’ நடவடிக்கையைத் தொடர்வதும் இவற்றில் அடங்கும்.

மாறிவரும் பொருளியல் சூழலுக்கு மத்தியில் மக்கள்தொகையின் தேவைகள் பூர்த்திசெய்யப்படுவதை உறுதிசெய்ய சிங்கப்பூரின் கொள்கைகளைத் திரு ஓங் தொடர்ந்து மறுஆய்வு செய்வார்.

எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பின்னணியிலிருந்து வரும் சிங்கப்பூரர்கள் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதிசெய்வதும் மற்றொரு முன்னுரிமை.

அனைவரையும் உள்ளடக்கும் சிங்கப்பூரின் பொருளியல் முறையையும் தகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் முறையையும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அது தொடர்ந்து உருமாற வேண்டும் என்றும் திரு ஓங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்