பிடிஓ வீட்டிற்கு குடிபுகுவோர்க்கு சிரமத்தைக் குறைக்க ஏற்பாடு

2 mins read
உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்பும் முக்கிய அமைப்புகள் இடம்பெறும் குழு நிறுவப்பட்டுள்ளது
31990de5-8f2f-44be-8ed1-615eb3dcebb5
‘தெம்பனிஸ் கிரீன்ஓப்பல்’ குடியிருப்பாளர்களுடன் உரையாடும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ். - படம்: தேசிய வளர்ச்சி அமைச்சு
multi-img1 of 2

வீட்டு உரிமையாளர்கள் தங்களது புதிய பிடிஓ வீடுகளுக்குக் குடிபோகும்போது அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, பல அமைப்புகள் இடம்பெறும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய உள்கட்டமைப்பு, அத்தியாவசியச் சேவைகள் உரிய நேரத்தில் நிறைவுறுவதை உறுதிசெய்வதில் அது கவனம் செலுத்தும்.

‘தெம்பனிஸ் கிரீன்ஓப்பல்’ பிடிஓ வீடுகளுக்குக் குடிபுகும் வீட்டு உரிமையாளர்களுக்கான வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) சாலைக்காட்சியில் தேசிய அளவிலான இந்த முன்னெடுப்பை சனிக்கிழமை (ஏப்ரல் 12) தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் அறிவித்தார்.

“வீடுகளைக் கட்டும் பரந்த அளவிலான திட்டத்துடன், வீடுகளுக்குக் குடிபுகுவோருக்கு சிரமத்தைக் குறைப்பதற்குத் திட்டமிடுதல், ஒருங்கிணைப்பு முயற்சிகளை வலுப்படுத்துவது இன்னும் முக்கியமானது,” என்றார் அவர்.

2025க்கும் 2030க்கும் இடையே ஏறக்குறைய 130,000 பிடிஓ வீடுகள் கட்டி முடிக்கப்படும்.

கிட்டத்தட்ட 150 வீடமைப்புத் திட்டங்கள் கட்டுமானத்தில் இருக்கும் வேளையில், 2026லும் 2027லும் பிடிஓ கட்டுமானம் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுவதாகத் திரு டான் சொன்னார்.

இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஒருங்கிணைப்புக் குழுவுக்கான பேச்சாளர் ஒருவர், இத்தகைய ஒரு மறுஆய்வு சரியான நேரத்திலும் காலத்திற்கேற்பவும் இடம்பெறுவதாகக் கருத்துரைத்தார்.

தேசிய வளர்ச்சி அமைச்சாலும் விவகவாலும் வழிநடத்தப்படும் இந்தக் குழுவில், புதிய பிடிஓ திட்டங்களுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டுவதிலும் விநியோகிப்பதிலும் அவற்றை நிர்வகிப்பதிலும் சம்பந்தப்பட்ட முக்கிய அமைப்புகள் இடம்பெறுகின்றன. நிலப் போக்குவரத்து ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம், தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம், மக்கள் கழகம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

புதிய குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளுக்குள் குடிபுகும்போது கைப்பேசி சமிக்ஞை கட்டமைப்பு, நடைபாதைகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை உரிய நேரத்தில் வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களை அந்த அமைப்புகள் கையாளும்.

குடியிருப்பாளர்களின் வசதிக்காகக் கடைகளும் குழந்தைப் பராமரிப்பு நிலையங்களும் விரைவில் இயங்குவதற்கான வழிமுறைகளையும் இக்குழு ஆராயும்.

குழுவில் இடம்பெறும் அமைப்புகள், தங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை இன்னும் வலுப்படுத்தும் என்று கூறிய திரு டான், ஆக அண்மைய நிலவரம் குறித்து குடியிருப்பாளர்களுக்குத் தெரியப்படுத்த சமூகத்தில் அவை கூடுதல் தொடர்புகளை மேற்கொள்ளும் என்றார்.

குறிப்புச் சொற்கள்