நோன்புப் பெருநாளுக்கான தொழுகை ஏற்பாடுகள்

நோன்புப் பெருநாளுக்கான தொழுகை ஏற்பாடுகள்

1 mins read
382092ec-2dc2-4b6c-900f-8fbaf0ad17ba
சிங்கப்பூர் முஸ்லிம்கள் அடுத்த வாரம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவார்கள்.  - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் அடுத்த வாரம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவார்கள். எதிர்வரும் நோன்புப் பெருநாளன்று அதிகரித்துள்ள தொழுகை இடங்களுக்கான தேவையைப் பூர்த்திசெய்ய, முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றமும் (முயிஸ்) பள்ளிவாசல்களும் இணைந்து, சமூகத்தினருக்குப் போதிய அளவில் தொழுகை இடங்களை வழங்க விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

பள்ளிவாசல்கள் மூன்று தொழுகை அமர்வுகள் வரை, ஏறக்குறைய 240,000 தொழுகை இடங்களை வழங்கும். பெண்களுக்கான இடங்களும் அவற்றில் அடங்கும்.

கூடுதல் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 49 இடங்களில், மேலும் 24,000 தொழுகை இடங்கள் வழங்கப்படும். இது, சென்ற ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட 30 விழுக்காடு அதிகம்.

தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே தொழுகை நடத்தும் வசதியை செய்துகொடுக்கும் நோக்கில், மூத்தோருக்கும் நடமாட்ட வசதி தேவைப்படுவோர்க்கும் இந்தக் கூடுதல் இடங்கள் வழங்கப்படும்.

கூட்டம் குறைவாக உள்ள பள்ளிவாசல்கள் அல்லது இரண்டாவது, மூன்றாவது அமர்வுகளில் தொழுகை செய்யக்கூடிய நிலையில் உள்ளவர்கள், அவ்வாறே செய்யும்படி முயிஸ் ஊக்குவிக்கிறது. அனைவரும் வசதியாகத் தொழுகை செய்வதை அது உறுதிசெய்யும்.

குறிப்புச் சொற்கள்