ஒருங்கிணைந்த இந்தியப் பண்பாட்டைச் சித்திரித்த மாணவியின் கைவண்ணம்

3 mins read
752e3a0b-1c24-4dd5-9ee3-81cd3020fdb2
சிங்­கப்­பூர் எக்ஸ்போ அரங்கில் நடைபெற்ற 39வது லசால் கலைக் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டதாரிகளைப் பாராட்டினார்.  - படம்: கீர்த்திகா ரவீந்திரன் 

வாழ்க்கையின் கண்ணோட்டங்களையும் உறவுகளையும் சிறந்த வழியில் சித்திரிக்க கலை தனக்கு உதவுவதாகக் கருதுகிறார் திரிஷா செல்வராஜ், 22.

குறிப்பாக, தன் தாயாருடனான உறவைப் புரிந்துகொள்ள கலை உந்துதலாக இருந்தது என்கிறார் அந்த இளம் மாணவி.

“அம்மாவுடனான உறவு தொடக்கத்தில் சிறிது சிக்கலாக இருந்தது,” என்று நினைவுகூர்ந்தார் திரிஷா.

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பிறந்த திரிஷா, சிறு வயதில் சிங்கப்பூருக்கு வந்தார். அப்போதே கலைமீது தனக்கு அதிக ஆர்வம் இருந்ததாக அவர் கூறினார்.

“எனக்கு சாதாரண அலுவலக வேலை செய்ய விருப்பமில்லை. கலையை என் வாழ்க்கைத்தொழிலாகத் தொடர விரும்பினேன்,” என்றார் அவர்.

கலையின் மீதான தணியாத ஆர்வத்தால் திரிஷா லசால் கலைக் கல்லூரியில் ஈராண்டுகள் நுண்கலை பயின்றார்.

ஓர் இந்தியப் பெண்ணாக இந்தியப் பண்பாட்டை ஒருங்கிணைக்கும் வண்ணம் தனது கலைப் படைப்புகள் அமைந்தன என்றார் திரிஷா.

தனது பாடத்தின் ஒரு பகுதியாக அரிசி மாவுக் கோலத்தைப் பயன்படுத்தி அண்மையில் ஒரு கலைவடிவத்தைக் காட்சிப்படுத்தினார்.

“இந்திய வீடுகளில் வழக்கமாகக் காணப்படும் சிக்குக் கோலங்களை மையமாக வைத்து அந்தக் கலை வடிவத்தைப் படைத்தேன். இந்தக் கோலம், சமுதாயத்தின் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது,” என்று விவரித்தார் திரிஷா.

அதுமட்டுமன்றி, தனது படைப்புகள் இந்தியப் புராணக் கதைகள் சிலவற்றைக் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்றார் அவர்.

“வலிமை வாய்ந்த பெண் கதாபாத்திரங்களைக் கொண்ட புராணக் கதைகள் தனக்குப் பிடிக்கும்,” என்று திரிஷா குறிப்பிட்டார்.

மகாபாரதத்தில் வரும் திரௌபதி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு சேலைகளைப் பயன்படுத்தி மனித உருவத்தை வடிவமைத்த தன் கலைப் படைப்பை ஓர் எடுத்துக்காட்டாக அவர் சுட்டிக்காட்டினார்.

தனது கலைத்திறனை வெளிப்படுத்தக்கூடிய எந்தப் பொருளையும் யோசனையையும் ஆராய ஆவலாக உள்ளதாகக் கூறினார் திரிஷா.

“முயற்சி செய்வதே எனது குறிக்கோள். தோல்வியடைந்தாலும் முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும்,” என்றார் அவர்.

திரிஷா உட்பட லசால் கலைக் கல்லூரி மாணவர்கள் 774 பேருக்கு, ஆகஸ்ட் 8ஆம் தேதி, பல்வேறு கலைப்படிப்புகளில் பட்டயம், பட்டம், முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டது.

சிங்­கப்­பூர் எக்ஸ்போ அரங்கில் நடைபெற்ற 39வது லசால் கலைக் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டதாரிகளைப் பாராட்டினார்.

“கலையும் வடிவமைப்பும் நமது வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்கும் பொருத்தமானவை. ஒவ்வொரு துறையிலும் அவற்றுக்கு ஒரு பங்கு உள்ளது,” என்றார் அவர்.

சிங்கப்பூர் கலை, வடிவமைப்புத் துறைகளில் புதிய மேம்பாடுகள் குறித்தும் திரு டான் பேசினார்.

சிங்கப்பூரின் முதல் வடிவமைப்பு அருங்காட்சியகத்திற்கான திட்டங்கள், செப்டம்பர் மாதம் நடப்புக்கு வரும் எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகை ஆகிய திட்டங்கள் உள்ளூர்க் கலைஞர்களுக்கு அதிக ஆதரவையும் வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றார் அமைச்சர்.

சிறந்து விளங்கிய 16 பட்டதாரிகள் லசால் சிறப்புக் கல்வி விருதைப் பெற்றனர்.

மேலும், முதுகலை மாணவர்கள் கிட்டத்தட்ட 50 பேர், இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் முதுகலைப் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களைப் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்