மனநலத்தை ஊக்குவிக்கும் பிராம் நிலையம் (Brahm Centre) கோல்ட்பெல் குரூப்புடன் இணைந்து வியாழக்கிழமை (ஜூன் 5) கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது.
அது ஸ்காட்ஸ் ரோட்டில் உள்ள கோல்ட்பெல் டவர்சில் நடந்தது.
கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மூத்தோரின் கலைப் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
‘An Uplifting Journey’ என்னும் கருப்பொருளில் நடக்கும் இந்தக் கண்காட்சி சனிக்கிழமை (ஜூன் 7) வரை நடக்கிறது.
கலையின் மூலம் மன உறுதி மற்றும் தன்னை கண்டறிதல் அம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இந்தக் கண்காட்சி உதவும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மூத்தோர் வாழ்க்கையில் மீண்டு வருவது, புத்தாக்கமாகச் செயல்படுவது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றை இந்தக் கலைக் கண்காட்சிமூலம் தெரிந்துகொள்ள முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
வேலையிலிருந்து ஓய்வு, உடல்நலப் பாதிப்பு, அன்புக்குரியவர்கள் மறைவு உள்ளிட்ட சம்பவங்களுக்குப் பின்னர் மூத்தோர் தனிமையில் வாடக்கூடும். அவர்கள் சமூகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறக்கூடும் என்று பிராம் நிலையத்தின் தலைமை நிர்வாகி ஏஞ்சி சூ தெரிவித்தார்.
“அதுபோன்ற தருணங்களில் கலை கைகொடுக்கும், நம்பிக்கை தரும், மீண்டும் இயல்பாக வாழ ஊக்குவிக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கலாசார, சமூக, இளையர் துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாசும், சுகாதார அமைச்சின் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ்வும் இந்தக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
பிராம் நிலையத்தின் மூலம் 50 வயதுக்கு மேற்பட்ட 4,000க்கும் அதிகமான மூத்தோர் பயனடைந்துள்ளனர். சிங்கப்பூரில் ஐந்து இடங்களில் பிராம் நிலையங்கள் உள்ளன.

