சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக ‘ஆந்தை’ திரைப்படத்தின் முதல் காட்சியும் அதைப் பற்றிய கருந்துரையாடலும் இடம்பெற்றன.
ஆகஸ்ட் 25ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் முனைவர் இரா.தினகரன் பங்கேற்றார்.
ஸூம் வழி பேசிய ஆந்தை திரைப்படத்தின் கதாநாயகன் விகாஷ், ஆந்தை இரண்டாம் பாகத்தைத் தான் தயாரிக்க இருப்பதாகவும், அதனை மில்லத் அகமது இயக்குவார் என்றும் கூறினார்.
திரைப்படம் 90 நிமிடங்கள் ஒளிபரப்பானது. அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடந்தது.
“உள்ளூர் எழுத்தாளர் மில்லத் அகமது ஆந்தை திரைப்படத்தை உருவாக்கி, தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் திரைவெளியீடு செய்துள்ளது அவருக்குக் கிடைத்த வெற்றி. மேலும் இதனை இரண்டு சாதனைப் புத்தகங்களில் பதிவுசெய்துள்ளார்,” என்று வரவேற்புரை ஆற்றிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் திருவாட்டி பிரேமா மகாலிங்கம் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலில், “படத்தில் வில்லன் சிறு வயதில் வாழ்கின்ற இடம், வாழ்வு முடிகின்ற இடமான கல்லறையாக இருக்கிறது. அங்கு வாழும் ஒருவன் மனப் பிறழ்வு உள்ளவனாகத்தான் இருக்க முடியும். அதனால்தான் பெண்களைச் சீரழிக்கிறான். இதற்கான பின்புலம் நிச்சயமாக வலுவானதாக இருக்கும். அதனை நாம் ஆந்தை 2 இல் பார்க்கலாம்,” என்று பேசினார் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன்.
“மர்மமும், திகிலும் கலந்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதுதான் வாழ்க்கை. இன்றைய காலகட்டத்தில் திகில் படங்கள்தான் சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது. சிறப்பான திகில் படத்தைத் தந்திருக்கிறார் மில்லத் அகமது,” எனப் பாராட்டினார் முனைவர் மன்னை க. இராஜகோபாலன்.
ஆந்தை படத்தின் தலைப்பைப் பற்றியும், ஆந்தை பற்றிய பல சுவையான செய்திகளைத் தொகுத்தளித்து, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட மனித மனம் எப்படி இயங்கும் போன்ற தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் ஆசிரியர் மா.அர்ச்சுனன்.
தொடர்புடைய செய்திகள்
“புதுமையாகச் சிந்திக்க கூடியவர் மில்லத் அகமது. அவர் இந்தப் படத்தில் தனது பன்முகத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்,” என்று வாழ்த்தினார் திரு. தினகரன்.
தலைமையுரை ஆற்றிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன், படத்தில் காணப்பட்ட சில குறைகளைக் குறிப்பிட்டு, வருங்காலத்தில் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி, இந்தக் குறைகளைக் களைந்து, வெற்றிபெற வாழ்த்தினார்.
எதிர்கால எழுத்தாளர்கள் திரைப்படத் துறையில் நுழைய ஆந்தை ஒரு முன்னுதாரணமாக இருக்கும். இதனைச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் திரையிடுவதில் வாழ்நாள் உறுப்பினர் என்ற வகையில் பெருமைப்படுவதாக ஏற்புரையில் படத் தயாரிப்பாளர் மில்லத் அகமது கூறி, தனது முதல் பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.