செயற்கை நுண்ணறிவு அறிவியலை மறுவடிவமைக்கும்: ஹெங் சுவீ கியட்

2 mins read
44268a19-601b-4906-9fcf-4abaa97f62ee
தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவர் ஹெங் சுவீ கியட், உலக இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 6) உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவு வழங்கும் புரட்சியால் மின்னியல் வழியாகப் பயிலும் திறன்களை அடையாளம் காணும் நிலையில் உலகம் உள்ளது.

எனவே ஆராய்ச்சி, புத்தாக்கத் துறைகள் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்று தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவர் ஹெங் சுவீ கியட், 14ஆம் உலக இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) ஆற்றிய உரையில் கூறினார்.

தேசியப் பல்கலைக்கழகத்தில் ‘உற்சாகப்படுத்துதல், ஈடுபடுத்துதல், செயல்படுத்துதல்’ என்ற கருப்பொருளில் ஜனவரி 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு நடைபெறும் மாநாட்டில் முன்னாள் துணைப் பிரதமருமாகிய திரு ஹெங், அறிவியலின் எதிர்காலம் பற்றிய தமது கருத்துகளை வெளியிட்டார்.

செயற்கை நுண்ணறிவு, கணினியியல், துறைகளுக்கு இடையிலான ஆய்வு ஆகியன அறிவியலின் மறுவடிவம் என்ற அவர், எதிர்காலத்தில் அவை மூன்றுமே அறிவியலைக் கட்டமைக்கும் என்றும் விளக்கினார்.

செயற்கை நுண்ணறிவு அறிவியல் பூர்வமான அதிநவீனக் கருவிகளை வழங்கினாலும் சமூகத்தின் நெறிமுறைகள் பற்றிய கவனத்தை அக்கருவிகள் ஈர்த்துள்ளன. எனவே அவற்றைப் பொறுப்புடன் பயன்படுத்தக் கொள்கை வடிவமைப்பாளர்களுடன் விஞ்ஞானிகள் பணியாற்ற வேண்டியுள்ளது.

மேம்பட்ட கணினித்துறையான ‘குவான்டம் கம்பியுட்டிங்’ மிகவும் துல்லியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கினாலும் அதன் நம்பகமான செயல்பாட்டுக்கு ஆய்வுகள் மேலும் தேவைப்படுகின்றன. ஏனெனில் அவ்வகைக் கணினிகள் பொதுவான கணினிகளைவிட மிகவும் குளிரான இடங்களில் செயல்படுகின்றன.

பருவநிலை மாற்றம் போன்ற சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் துறைகளுக்கு இடையிலான ஆராய்ச்சிகள் அவசியமாகும். உதாரணத்துக்கு, பருவநிலை குறித்த ஆராய்ச்சியில் சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல், தரவுகள் மேலாண்மை, கொள்கை ஆய்வு போன்ற பல துறைகள் பணியாற்றுகின்றன.

எனவே அத்துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை தேசிய ஆய்வு அறநிறவனம் ஊக்குவிக்கிறது.

அறநிறுவத்தின் இந்தச் செயல்பாடுகள், ஆராய்ச்சித் திறனை வலுப்படுத்தும் இலக்குடன் வடிவமைக்கப்பட்ட அரசாங்கத்தின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தின் அங்கமாக நடத்தப்படுகின்றன.

வருகின்ற 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் அதன் ‘ஆராய்ச்சி, புத்தாக்கம், தொழில்முனைவு’ திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காடான $37 பில்லியன் மதிப்பிலான இத்திட்டத்தைக் கடந்த டிசம்பர் மாதம் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிதி ஒதுக்கீட்டில் இரண்டு முக்கிய ஆய்வுத் திட்டங்களுக்கு $3 பில்லியன் தொகை பயன்படுத்தப்படவுள்ளது.

மூப்படையும் மக்கள்தொகை சார்ந்த தேசிய உத்திபூர்வ திட்டத்துக்கும் சிங்கப்பூரின் பொருளாதார மதிப்பை உயர்த்தும் திட்டத்துக்கும் உச்சநிலை ஆராய்ச்சிகளை நடத்தும் இலக்குடன் அந்த நிதி பயன்படுத்தப்படும்.

சிங்கப்பூரின் ஆய்வாளர்களை உலக அறிவியல் சமூகத்துடன் இணைக்கும் பணிகளையும் தேசிய ஆய்வு அறநிறுவனம் மேற்கொள்ளும்.

கடந்த 2013ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாநாட்டில் இவ்வாண்டு ஆக அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். முதன்முறையாகக் கலந்துகொள்ளும் கஸக்ஸ்தான், மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா உட்பட 57 நாடுகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகள் சிங்கப்பூர் வந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்