செயற்கை நுண்ணறிவைச் சாதாரணமாகக் கடந்துசெல்லும் ஒரு மாற்றமாகக் கருதிவிட முடியாது எனக் கூறியுள்ளார் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ.
செயற்கை நுண்ணறிவால் மாறிவரும் உலகிற்குப் பட்டதாரிகளைத் தயார் செய்வது உயர்கல்வி நிலையங்களின் கடமை என்றார் அவர்.
அதை முன்னிட்டு 2027ஆம் ஆண்டுமுதல் உயர்கல்வி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவுத் திறன்களைக் கற்பிக்கவும் சோதிக்கவும் மாணவர்களின் பாடத்திட்டங்களில் அது ஒரு கட்டாய அங்கமாக இணைக்கப்படும் என்று திரு லீ அறிவித்தார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் 120ஆம் ஆண்டு நிறைவையொட்டி வியாழக்கிழமை (மே 21) நடந்த முக்கியப் பேச்சாளர்கள் தொடரில் திரு டெஸ்மண்ட் அதைக் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமின்றி பலதுறை தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்களுக்கும் அந்தப் புதிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடத்திட்ட மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று திரு டெஸ்மண்ட் தெரிவித்தார்.
“செயற்கை நுண்ணறிவு நம் எதிர்காலத்தை மாற்றிவிடுமா என்று வினவாமல் நாம் எதிர்காலத்தை எவ்வாறு சாமர்த்தியமாக வடிவமைக்கலாம் என்று சிந்திக்க வேண்டும்,” என்றார் அவர்.
“நிலப்பரப்பளவு, நிதி, இயற்கை வளங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூர் போட்டித்தன்மைமிக்க நாடாக இருந்ததில்லை. மக்களின் திறன்களையும் தரத்தையும் கொண்டுதான் உயர்ந்துள்ளோம்,” என்று அவர் சொன்னார்.
“பல வாய்ப்புகளைச் சிங்கப்பூர் தொடர்ந்து உருவாக்கி முதலீட்டாளர்களை ஈர்க்கவேண்டும். அத்துடன், கடினமான சவால்களையும் எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவைக் கையாளும் திறனை நம் பட்டதாரிகள் கொண்டிருக்கவேண்டும்,” என்றும் திரு டெஸ்மண்ட் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் என்றால் என்ன? அவை என்ன செய்யும்? என்பதைவிட அவற்றை நாம் எவ்வாறு திறம்பட பயன்படுத்தலாம் என்பது கற்பிக்கப்படுவது இந்தக் காலகட்டத்தில் அவசியம். செயற்கை நுண்ணறிவைப் பாடத்திட்டங்களில் கட்டாயமாக இணைப்பதை வரவேற்கிறேன்,” என்றார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் கெஜ ஷ்ரேயா, 23.
செயற்கை நுண்ணறிவால் வேலைகளை இழக்க நேரிடலாம் என்ற கவலைக்கு இடையில் அதைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதே சிறப்பு என்றும் ஷ்ரேயா கூறினார்.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டைப் பல்கலைக்கழகங்களில் அதிகரிப்பது மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்புடைய ஒன்று என எண்ணுகிறார் தகவல் கட்டமைப்புகள் துறையில் பட்டம் பயிலும் கிறிஸ் கணேஷ் சேவியர்.
“வருங்கால ஊழியர்களான எங்களுக்குச் செயற்கை நுண்ணறிவை நேர்மையாகவும் சரியாகவும் பயன்படுத்தக் கற்பிப்பது அதன் முழுப் பலன்களை அனுபவிக்க நிச்சயம் உதவும்,” என்றார் அவர்.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவைப் பாடத்திட்டங்களில் அறிமுகப்படுத்தினாலும் ஆசிரியர்களின் கற்பித்தல் பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தொடர்வது அவசியம் என்று திரு டெஸ்மண்ட் வலியுறுத்தினார்.

