தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்ஜி60: வரலாற்றைச் சித்திரிக்கும் கலை, மரபுடைமை நிகழ்வுகள்

2 mins read
027688e5-cb4f-4c0a-88ad-ffa3a254f7e3
சிங்கப்பூர், இவ்வாண்டு அதன் 60வது சுதந்திர தினத்தைக் (எஸ்ஜி60) கொண்டாடுகிறது. - கோப்புப் படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு சுதந்திர தினம் (எஸ்ஜி) இவ்வாண்டு கொண்டாடப்படுவதையொட்டி பல புதிய கண்காட்சிகள் அமைக்கப்படும் என்றும் பொது இடங்களில் ஓவியப் படைப்புகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் வரலாற்றையும் அடையாளத்தையும் பற்றிச் சிந்திக்க சிங்கப்பூரர்களை ஊக்குவிப்பது அந்நடவடிக்கைகளின் நோக்கம். ‘எஸ்ஜி60’ கொண்டாட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள், நடவடிக்கைகளில் இது அடங்கும்.

சிங்கப்பூரர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளவும் தங்களிடையே இருக்கும் ஒரே வகையான கொள்கைகள் பற்றி சிந்திக்கவும் தங்கள் தேசப் பற்றை மறுஉறுதிப்படுத்திக்கொள்ளவும் எஸ்ஜி60 சிங்கப்பூரர்களுக்கு வாய்ப்பளிக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுருந்தார்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் எஸ்ஜி60 கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தபோது அவர் அவ்வாறு சொன்னார்.

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் வழங்கும் பல்லூடகப் படைப்பு, சிங்கப்பூர் தேசியக் காட்சியகத்தில் இடம்பெறும் புதிய காட்சியகம், இவ்வாண்டுக்கான ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் சிங்கப்பூர் கலைக் கண்காட்சி (Singapore Biennale 2025) ஆகியவை எஸ்ஜி60ஐ ஒட்டி இவ்வாண்டு நடைபெறவுள்ள கலை, மரபுடைமை நிகழ்வுகளில் அடங்கும்.

வரும் ஜுலை மாதம் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் நடைபெறவிருக்கும் ‘கிளாஸ் ரொட்டண்டா’ (Glass Rotunda) நிகழ்ச்சி, சிங்கப்பூர் வரலாற்றில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளுக்கு வருகையாளர்களை ‘அழைத்துச்’ செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சிங்கப்பூர் தேசியக் காட்சியகத்தில் ஜூலை மாதம் திறக்கப்படவிருக்கும் புதிய கண்காட்சி ஒன்று ஓவியப் படைப்புகளின் வாயிலாக 19ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரையிலான சிங்கப்பூரின் வரலாற்றை எடுத்துக்காட்டும்.

‘சிங்கப்பூர் கதைகள்: கலைப் படைப்புகள் மூலம் பாதைகள், சுற்றுப் பாதைகள்’ (Singapore Stories: Pathways And Detours In Art) என்றழைக்கப்படும் அந்தக் கண்காட்சி, சிங்கப்பூர் சமூகத்தின் உருமாற்றங்களை உள்ளூர் ஓவியர்களின் படைப்புகளின் மூலம் எடுத்துக்காட்டும்.

இவ்வாண்டுக்கான ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் சிங்கப்பூர் கலைக் கண்காட்சி வரும் அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அரங்கேறும்.

‘நமது சிங்கப்பூரை ஒன்றாக உருவாக்குவோம்’ (Building Our Singapore Together) என்பதே எஸ்ஜி60-இன் கருப்பொருளாகும்.

‘முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தை’ மையமாகக் கொண்டு எஸ்ஜி60 முயற்சியில் இறங்குவது அதன் இலக்காகும். அதோடு, தேசத்தை உருவாக்கும் பயணத்தைக் கொண்டாடியபடி பன்முகக் கலாசாரம், தைரியமாகச் செயல்படுவது, மீள்திறன், வெளிப்படையாக இருப்பது போன்ற தங்களிடையே பொதுவாகக் காணப்படும் கொள்கைகள் பற்றிச் சிந்திக்க குடிமக்களை ஊக்குவிப்பதும் இலக்கு.

குறிப்புச் சொற்கள்