பொது இடங்களில் கலைப்படைப்பு: மவுண்ட்பேட்டன் எம்பியின் கருத்து

பொது இடங்களில் கலைப்படைப்பு: மவுண்ட்பேட்டன் எம்பியின் கருத்து

2 mins read
கலையார்வலர், பொது இடங்களில் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும்
0e8168c8-9e75-4b65-9c2c-5b4faa05b398
மவுண்ட்பேட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கோ ஸி கீ, மார்கஸ் பாங் எனும் கலைஞரின் அண்மைய பொதுப் படைப்பு ஒன்றினை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். - படம்: நாடாளுமன்ற உறுப்பினர் கோ ஸி கீ ஃபேஸ்புக்

பொது இடங்களில் கலைப்படைப்புகளை செய்துவந்த கலைஞர் ஒருவரை அண்மையில் மவுண்ட்பேட்டன் எம்ஆர்டி நிலைய ஊழியர்கள் தடுத்துநிறுத்தி காவல்துறையில் புகார் அளித்தனர்.

மார்கஸ் பாங் என்ற அந்த 24 வயது இளையர், மவுண்ட்பேட்டன் எம்ஆர்டி நிலைய நடைபாதையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தரை ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார்.

உயர் அழுத்த நீர் தெளிப்பான் (பவர் வாஷர்) சாதனம் கொண்டு தரையைச் சுத்தம் செய்தபிறகு சுண்ணாம்பைக் கொண்டு உருவானது அந்தத் தரை ஓவியம். அவரை எம்ஆர்டி நிலைய ஊழியர்கள் தடுத்ததுடன் அவர்களால் ஓவியம் பிறகு அகற்றப்பட்டது.

அச்சம்பவம் குறித்து மார்கஸ் தமது டிக்டாக் செயலியிலும் பகிர்ந்தார்.

அக் கலைஞர் குறித்து மவுண்ட்பேட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கோ ஸி கீ அவரது ஃபேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) பதிவிட்டார்.

கலைஞர் மார்கஸ் வடிவமைத்த படைப்பு அழிக்கப்பட்டதைப் பற்றி பலர் அவரிடம் தெரிவித்ததை நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

நிலப்போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி நிறுவனம், காவல்துறை ஆகிய அமைப்புகளை முதலில் தொடர்புகொண்டு சம்பவத்தின் முழு விவரங்களை அறியவேண்டும் என்பதே முறையானது என்று எண்ணியதாக திருவாட்டி கோ அவரது பதிவில் தெரிவித்தார்.

மார்கஸ் சில காலமாக வடிவமைத்த பொதுக் கலைப்படைப்புகள் மவுண்ட்பேட்டன் வட்டாரத்தில் அடிக்கடி காணப்பட்டன. அவை அப்பகுதிக்கு புதுப்பொலிவு அளித்ததாக தனிப்பட்ட முறையில் தாம் கருதியதாக திருவாட்டி கோ விளக்கினார்.

இருப்பினும் தற்போதைய படைப்பு, மவுண்ட்பேட்டன் எம்ஆர்டி நிலைய வளாகத்துள் அமைக்கப்பட்டதால், அது எஸ்எம்ஆர்டி நிர்வாகத்தின்கீழ் அமைகிறது. அதனால் அப்படைப்பு அகற்றப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

கலை ஆர்வமும் பொது விதிமுறைகளும்

மேலும் மவுண்ட்பேட்டன் வட்டாரக் கலை ஆர்வலர் குழுவின் தலைவரிடம் திரு பாங்கை தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் திருவாட்டி கோ கூறினார்.

கலைகளை வெளிப்படுத்தும் ஆர்வத்தோடு பொது இடங்களில் நடப்பில் உள்ள சட்டதிட்டங்களுக்கு பங்கம் ஏற்படாமல் நடந்துகொள்வதில் சமநிலையைக் காண்பது எப்படி என்பது ஆராயப்படவேண்டும் என்று அவர் கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்
மவுண்ட்பேட்டன்நாடாளுமன்ற உறுப்பினர்கருத்துபொதுச் சேவைகலைஞர்ஓவியம்தெரு