தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் உயரிய நிலையில் இன, சமய நல்லிணக்கம்: ஆய்வு

3 mins read
0829ab05-8893-4978-9db6-dc70e38f9d0a
வெவ்வேறு இனத்து மக்களுக்கு இடையிலான நம்பிக்கை உயர்ந்திருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சமூக ஒருங்கிணைப்பு வலிமையாக உள்ளது. பொதுத்துறைக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையும் உயர்வாக உள்ளது.

இன நல்லிணக்கம், பிற பண்பாடுகளின் மீதான ஆர்வம், பிற சமயங்களை ஏற்கும் பெருந்தன்மை ஆகியவற்றில் சிங்கப்பூர், கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளாக முன்னேற்றம் காட்டியுள்ளது என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

கொள்கை ஆய்வுக் கழகமும் இன, சமய நல்லிணக்கத்திற்குக் குரல்கொடுக்கும் ஒன்பீபள்.எஸ்ஜி (OnePeople.sg) அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள இன, சமய நல்லிணக்கக் குறியீடுகளின் முடிவுகள் கொண்ட முதலாவது ஆய்வறிக்கை இன, சமய நல்லிணக்கம் சார்ந்த பல்வேறு தரவுகளைக் கொண்டுள்ளது.

ஆய்வின்மூலம் கொணரப்பட்ட முடிவுகள், சிங்கப்பூரின் சமூகத்திற்கு ஆணிவேராக உள்ள கலாசாரப் பன்முகத்தன்மை மீதான கடப்பாட்டின் அறிகுறிகள் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் சுகாதார அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, இந்த ஆய்வறிக்கை தொடர்பில் திங்கட்கிழமை (பிப்ரவரி 3ஆம் தேதி) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது தெரிவித்தார்.

பாகுபாடு குறித்த பார்வையில் இனக்குழுக்கள் இடையே உள்ள வேறுபாடுகள் தொடர்பான கவலைகள் தொடர்ந்து இருந்தபோதும் இன, சமய நல்லிணக்கம் குறித்த பல்வேறு அளவுகோல்களின்படி சிங்கப்பூர் முன்னேற்றம் கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

“மற்ற நாடுகளுடனும் நகரங்களுடனும் ஒப்புநோக்க, சமூக ஒன்றிணைவு, அமைப்புகளின் மீதான நம்பிக்கை, இன நல்லிணக்கம் ஆகியவற்றில் சிங்கப்பூர் விஞ்சி நிற்கிறது,” என்றும் டாக்டர் ஜனில் கூறினார்.

பிப்ரவரி 3ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக்காக, புள்ளிவிவரத்துறையின் தரநிலைகளின்படி ஒட்டுமொத்த சிங்கப்பூரைப் பிரதிபலிக்கக்கூடிய மாதிரியாக, 18 வயதுக்கும் மேற்பட்ட ஏறத்தாழ 4,000 சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் ஆய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

இதுபோன்ற ஆய்வுகள் 2013லும் 2018லும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், ஆய்வில் பங்கேற்கும் சிங்கப்பூரரர்கள், தங்களுக்கு முன்பு ஆய்வில் பங்கேற்றோரைக் காட்டிலும் சமூக ஒன்றிணைவு குறித்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதாக 2024ஆம் ஆண்டின் ஆய்வறிக்கை காட்டுவதாகவும் டாக்டர் ஜனில் சுட்டினார்.

உதாரணத்திற்கு, பிற இனத்தவர்களிடமிருந்து நிறைய கற்கலாம் என்பதை வயது முதிர்ந்த பங்கேற்பாளர்களைக் காட்டிலும் இளைய பங்கேற்பாளர்கள் நம்புவதற்கான வாய்ப்பு அதிகம் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த எண்ணப்போக்குடன் தாங்கள் ஒத்துப்போவதாக அல்லது வலுவாக ஒத்துப்போவதாக 18 வயதுக்கும் 35 வயதுக்கும் உட்பட்டோரில் 70.1 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். இதனுடன் ஒப்புநோக்க, 36 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட 62.8 விழுக்காட்டினரும் 51 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட 58.8 விழுக்காட்டினரும் இந்த எண்ணப்போக்குடன் ஒத்துப்போவதாகக் கூறினர்.

சமூக நல்லிணக்கத்தைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர் எந்த அளவு அதைச் சாதித்துள்ளது என்பதை மக்களும் வயதும் அதிகரிக்கையில் அதிகம் உணர்வதாகவும் டாக்டர் ஜனில் கூறினார்.

“வளரும் ஒவ்வொரு தலைமுறையினருமே தரநிலையைத் தொடர்ந்து உயர்த்தி நமக்கான குறிக்கோள்களையும் உயர்வாகவே தீர்மானித்து வருகின்றனர் என்பதே இதன் பொருள்,” என்று அவர் கூறினார்.

முன்னேற்றம் தேவைப்படும் கூறுகள்

பரந்த அளவுகோள்களைப் பொறுத்தவரையில் நல்ல முன்னேற்றம் பதிவானபோதும், சில சவால்கள் தொடர்ந்து நீடித்தவண்ணம் உள்ளன.

வெவ்வேறு இனங்களுக்கு இடையிலான நட்பு, 2018 முதல் 2024 வரையில் குறைந்து வருவதை ஆய்வாளர்கள் சுட்டினர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த ஆய்வுகளின் முடிவின்படி, பிற இனத்தைச் சேர்ந்த நெருக்கமான நண்பர்கள் கொண்டுள்ளோரின் விகிதம் 2018ல் பதிவான 55.5 விழுக்காட்டிலிருந்து தற்போது 53.2 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.

இருந்தபோதும், 2013ல் பதிவான 45.6 விழுக்காட்டைக் காட்டிலும் தற்போதைய விகிதம் அதிகம்.

மக்களுக்குத் தற்போது பொதுவாகவே நெருங்கிய நண்பர்கள் குறைவாக இருப்பது ஒரு காரணம் என்று தலைமை ஆய்வாளரும் கொள்கை ஆய்வுக் கழகத்தின் சமூக ஆய்வுக்கூடத்தின் தலைவருமான டாக்டர் மேத்தியூ மேத்தியூஸ் தெரிவித்தார்.

பொதுவாக, ஆய்வில் கலந்துகொண்டோருக்குச் சராசரியாக அறுவருக்கும் அதிகமான நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். இந்த எண்ணக்கை, 2018ல் பதிவான எண்ணிக்கையான பத்தையும் 2013ல் பதிவான எட்டையும் விடக் குறைவு.

நட்பு வட்டங்கள் குறைந்துவரும் இந்நேரத்தில் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தோர் உறவாடுவதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்கக்கூடும் என்று கூறிய டாக்டர் ஜனில், இது சிங்கப்பூரில் மட்டும் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சினை அல்ல என்றார்.

குறிப்புச் சொற்கள்