அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போட்டியில் ஆசியான் நாடுகள் இருபக்கமும் நெருக்கடியைச் சந்தித்தாலும், அதிலிருந்து பலனும் பெறுவதாக ‘சிங்கப்பூர்-சீனா இருநாட்டு உறவுகள்’ வர்த்தகக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கருத்தரங்கத்தின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) பலமுனை உலகில் ஆசியான்-சீனாவுக்கான வாய்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
அனைத்துலகப் பேராளர்கள் பங்குபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வர்த்தகம், முதலீடு, உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ஆசியான்-சீனா இருதரப்பு உறவுகள் தொடர்ந்து ஆழமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வல்லரசுப் போட்டி அதிகரித்துள்ள சூழலில், தென்கிழக்காசிய நாடுகள் (ஆசியான்) இரு தரப்பிலிருந்தும் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், தொடர்ச்சியான பொருளியல் வாய்ப்புகளைக் கைப்பற்றி வருவதாக அனைத்துலக வர்த்தக நிபுணர்கள் அமர்வில் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டில் இரு நாடுகளின் அரசியல் நெருக்கடிகள் குறித்து நிபுணர்கள் பரவலாக விவாதித்தனர்.
இரு தரப்பிலும் சிக்கிய ஆசியான்
அமர்வில் உரையாற்றிய தென்கிழக்காசிய ஆய்வுக் கழகத்தின் யூசோப் இஷாக் கல்விக்கழக மூத்த ஆய்வாளர் ஸ்டீபன் ஓல்சன், அமெரிக்காவும் சீனாவும் தென்கிழக்காசியாவைத் தங்களின் செல்வாக்கை நிலைநாட்டும் சதுரங்கக் களமாகப் பார்க்கின்றன என்றார்.
குறிப்பாக, உலகமயமாக்கல், தாராளமய வர்த்தகத்திற்கு எதிரான ‘டிரம்பிசம்’ கொள்கைகள் அமெரிக்காவில் எந்த அளவுக்கு நீடிக்கும் என்பதும் அமர்வில் முக்கியக் கேள்வியாக எழுந்தது.
அமெரிக்கா தனது வர்த்தக ஒப்பந்தங்களில் பிற நாடுகளைத் தடுக்கும் கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறது. மறுபுறம், சீனாவும் தனது சட்டரீதியான விதிகளின் மூலம் அழுத்தங்களை அளிக்கிறது. இதனால், “அமெரிக்கா அல்லது சீனா என எந்தப் பக்கம் நின்றாலும் ஆசியான் நாடுகள் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழலே நிலவுகிறது,” என்று ஆய்வாளர் ஸ்டீபன் ஓல்சன் குறிப்பிட்டார்.
இதிலிருந்து தப்பிக்க, ஆசியான் நாடுகள் எந்தவொரு பக்கமும் சாயாமல், தங்களின் வர்த்தகக் கூட்டாண்மைகளைப் பன்முகப்படுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.
நெருக்கடிகளுக்கு நடுவிலும் மலரும் வர்த்தக வாய்ப்புகள்
அரசியல் பதற்றங்கள் நிலவியபோதிலும், ஆசிய வட்டாரத்திற்குள்ளான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ‘பிஎஸ்ஏ இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் வடகிழக்கு ஆசிய வட்டாரத் தலைவர் லிம் சின் சுவான் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய தயாரிப்பு விநியோகச் சங்கிலிகள் முன்பைவிடவும் மிகவும் நீக்குப்போக்குடன் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. ஒரே இடத்தில் உற்பத்தியைச் செய்யாமல், பாகங்களை வெவ்வேறு இடங்களில் தயாரித்து இறுதிப் பொருளாகக் கொண்டுவரும் முறை அதிகரித்துள்ளது. இந்தச் சிக்கலான வர்த்தக அமைப்பு, ஆசியான் நாடுகளுக்குப் புதிய பொருளியல் வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது என்றும் வல்லுநர்கள் அரங்கில் பதிவிட்டனர்.
