மின்னிலக்கப் பொருளியல் உடன்பாட்டில் ஆசியான் நாடுகள் கையெழுத்து

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்

மின்னிலக்கப் பொருளியல் உடன்பாட்டில் ஆசியான் நாடுகள் கையெழுத்து

1 of 2
படம்: இபிஏ
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Nov 2026 - 6:29 pm

3 mins read

மணிலா: இந்த வட்டாரத்தின் முதலாவது மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு உடன்பாட்டில் ஆசியான் நாடுகள் கையெழுத்திட்டன.

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் சனிக்கிழமை (நவம்பர் 14) அந்நிகழ்வு நடைபெற்றது.

ஆசியான் நாடுகளின் பன்முகத்தன்மைமிக்க ஆயத்தநிலையை அந்த உடன்பாடு வெளிப்படுத்துவதாக உள்ளது என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

தொழில் நிறுவனங்களும் பயனீட்டாளர்களும் பயன்பெறும் வகையில், 2027ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அந்த உடன்பாட்டின்கீழ் முதலாவது திட்டங்கள் அறிமுகம் காணும் என்று அவர் கூறினார்.

இந்த உடன்பாடு தொடர்பில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து பேச்சுவார்த்தை நடந்துவந்ததைச் சுட்டிய திரு கான், “ஒருபுறம் உயரிய இலக்குகளுடன், மறுபுறம் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும் உடன்பாட்டை எட்டுவது எளிதான செயலன்று,” எனக் குறிப்பிட்டார்.

இது ஆசியானின் முதலாவது தனித்துவ மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடு என எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு ஒரு செய்தியறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.

அணுக்கமான மின்னிலக்கப் பொருளியல் ஒருங்கிணைப்புக்கு அடித்தளமிடும் இந்த உடன்பாடு, வளர்ந்துவரும் ஆசியான் மின்னிலக்கச் சந்தையில் நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடுகிறது என்று அமைச்சு கூறியது.

எல்லை கடந்த தரவுப் பரிமாற்றம், முழுமையான மின்னிலக்க வணிகம், மூலக் குறியீடு பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை இந்த உடன்பாடு உள்ளடக்கியுள்ளது.

தொழில்நுட்பம், மின்வணிகம், கட்டண முறைகள், தளவாடம், விநியோகத் தொடர் போன்ற மின்னிலக்கத் துறைகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டை ஊக்குவித்து, அனைத்து நிலையிலான நிறுவனங்களும் ஆசியான் வட்டாரத்தில் விரிவாக்கம் காணவும் வளரவும் இது கைகொடுக்கும்.

எல்லை கடந்த தரவுப் பரிமாற்றம் உள்ளிட்ட மின்னிலக்க விதிமுறைகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பை இவ்வுடன்பாடு வழங்குவதாக எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான (வர்த்தகம்) திரு கான் கூறினார்.

“ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்துவமான சட்டங்கள், தொழில் ரகசியத்தன்மை, தேசியப் பாதுகாப்பு தொடர்பான தனிப்பட்ட அக்கறைகள் இருப்பதால் இந்த உடன்பாட்டின்கீழ் சில விதிவிலக்குகள் அனுமதிக்கப்படும்,” என்று அவர் சொன்னார்.

இருப்பினும், அந்த அக்கறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டுத் தரவுப் பரிமாற்றத்தை அனுமதிக்கும் அடிப்படை விதிகளை இவ்வுடன்பாடு வகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மிக மெதுவாக வளரும் உறுப்பு நாட்டின் வேகத்திற்கு ஏற்ப கூட்டமைப்பு முடங்கிவிடாமல் இருக்க, காலத்திற்கேற்ப மாறும் நீக்குப்போக்குத் தன்மையுடன் இந்த உடன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் திரு கான் கூறினார்.

இப்போது தயாராக இல்லாத பிற நாடுகள், தயாரானதும் எப்போது வேண்டுமானாலும் இணைவதற்குக் கதவு திறந்தே இருக்கிறது என்றும் அது அனைவரையும் உள்ளடக்கி மிக விரைவாக முன்னேற உதவும் என்றும் அவர் சொன்னார்.

பிலிப்பீன்சில் பிரதமர் வோங்

இதனிடையே, நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெறும் 49வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் லாரன்ஸ் வோங் சனிக்கிழமை மணிலாவிற்குப் புறப்பட்டுச் சென்றார்.

அங்கு நடக்கும் சந்திப்புக் கூட்டங்களில் பிரதமர் வோங்கும் மற்ற ஆசியான் நாடுகளின் தலைவர்களும் சமூக நல்லிணக்க முயற்சிகளில் தங்களது கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்துவர் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மை, வளப்பத்தை மேம்படுத்தும் வழிகள் குறித்து அவர்கள் கலந்தாலோசிப்பர் என்றும் அவ்வறிக்கை கூறியது.

குறிப்புச் சொற்கள்