தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமோர் லெஸ்டேக்கு ஆதரவளிக்க ஆசியான் ‘இ-ஸ்டார்ஸ்’ தொகுப்பு

2 mins read
91ee48f1-97f4-4994-8afe-d47e3ffb72da
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வளாகத்தில் திங்கட்கிழமை (ஜூலை 14) திமோர் டெஸ்டே பிரதமர் ஸனானா குஸ்மாவோவை (இடது) வரவேற்றார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: சாவ் பாவ்

திமோர்-லெஸ்டே குடியரசின் பிரதமர் ஸனானா குஸ்மாவோ சிங்கப்பூருக்கு நான்கு நாள் அதிகாரபூர்வ வருகையாக ஞாயிற்றுக்கிழமை மாலை இங்கு வந்து சேர்ந்தார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வளாகத்தில் திங்கட்கிழமை (ஜூலை 14) பிரதமர் குஸ்மாவோவுக்குச் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தைச் சந்தித்த பிரதமர் குஸ்மாவோ, அடுத்து சிங்கப்பூரின் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கைச் சந்தித்தார். பின்னர் பிரதமர் வோங், பிரதமர் குஸ்மாவோவுக்கு அதிகாரபூர்வ மதிய உணவு விருந்தளித்தார்.

இந்தச் சந்திப்புகளின்போது, திமோர்-லெஸ்டேயின் சுதந்திரத்திற்கு முன்பிருந்து நிலவி வரும், சிங்கப்பூருக்கும் திமோர்-லெஸ்டேவுக்கும் இடையிலான நட்பார்ந்த, நீண்டகால உறவை இரு தரப்பினரும் மறுஉறுதிப்படுத்தினர்.

வர்த்தகம், முதலீடு, மனிதவள மேம்பாடு, மக்கள் பரிமாற்றங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் மேம்படுவதை அதிபர் தர்மனும் பிரதமர் வோங்கும் வரவேற்றனர்.

திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் திமோர்-லெஸ்டேயின் வளர்ச்சியை ஆதரிக்க சிங்கப்பூர் மேற்கொண்டுள்ள கடப்பாட்டைத் தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும் சிங்கப்பூர் ஒத்துழைப்புத் திட்டத்தில் பங்கேற்க இன்னும் பல திமோர் லெஸ்டே அதிகாரிகளை அவர்கள் வரவேற்றனர்.

சிங்கப்பூர் ஏற்பாடு செய்துள்ள இந்தத் திட்டத்தில் இதுவரை 1,100 திமோர் லெஸ்டே அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில் திமோர்-லெஸ்டேயிலிருந்து 60 சந்தன மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கியதற்கு பிரதமர் வோங் நன்றி தெரிவித்தார்.

ஆசியானில் திமோர்-லெஸ்டே உறுப்பினராகும் நிகழ்வை ஆதரிக்கும் வகையில், அந்நாட்டுக்காவே சிறப்பாக தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட சிங்கப்பூர்-திமோர்-லெஸ்டே ஆசியான் தயார்நிலை ஆதரவுத் (இ-ஸ்டார்ஸ்) தொகுப்பை சிங்கப்பூர் அறிமுகப்படுத்தும்.

இந்தப் புதிய தொகுப்பு ஜூலை 2025 முதல் டிசம்பர் 2028 வரை இயங்கும் என்றும் டிசம்பர் 2022ல் தொடங்கப்பட்ட ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு விவரித்தது.

இ-ஸ்டார்ஸ் தொகுப்பில், ஆசியான் தொடர்பான பயிற்சிப் படிப்புகளுக்கான விரிவான அணுகல் மற்றும் திமோர்-லெஸ்டேயின் ஆசியானுடனான ஒருங்கிணைப்பை ஆதரிப்பது தொடர்பான நிபுணத்துவம் ஆகியவை அடங்கும்.

ஆசியான் அமைப்பின் எல்லைக்கு அப்பால், திமோர்-லெஸ்டேயின் அதிகாரிகளுக்கு உதவித்தொகை, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், சிறப்பாக உருவாக்கப்பட்ட தலைமைத்துவப் பயிற்சியையும் சிங்கப்பூர் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்