வட்டாரப் பொருளியலுக்கு ஆசியான் மின்சாரக் கட்டமைப்பு உதவக்கூடும்: டான் சீ லெங்

வட்டாரப் பொருளியலுக்கு ஆசியான் மின்சாரக் கட்டமைப்பு உதவக்கூடும்: டான் சீ லெங்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Nov 2026 - 7:25 pm

2 mins read

ஆசியானுக்குள் மின்சாரம் வாங்கி விற்கப்படுவது உறுப்பு நாடுகள் மின்சாரம் பெற்றுக்கொள்ள உதவும் என்று எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை (எரிசக்தி, தொழில்துறை) அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

மேலும் அது ஆசியானின் பொருளியல் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக அமையும் என்றும் டிரில்லியன் கணக்கில் முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் எண்ணம்

ஆசியானில் வட்டார அளவில் மின்சாரக் கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பொருளியல் வளர்ச்சிக்கு மெருகூட்டும் அம்சத்தை எடுத்துக்காட்டுவதுதான், ஆசியான் தலைவர் என்ற பொறுப்பில் சிங்கப்பூரின் இலக்கு என்றார் டாக்டர் டான். சிங்கப்பூர், 2027ஆம் ஆண்டில் ஆசியானுக்குத் தலைமை தாங்கும் நாடாகப் பொறுப்பேற்கவுள்ளது.

நவம்பர் மாதம் 13ஆம் தேதி உள்ளூர் ஊடகங்களிடம் டாக்டர் டான் பேசினார்.

“இந்தக் கனவை எடுத்துரைக்க நிச்சயமாக என்னால் முடிந்ததைச் செய்வேன். இதன் நன்மைகளை முடிந்தவரைப் பலர் அறிவதற்கான முயற்சிகளை எடுப்பேன். அதைத் தொடர்ந்து ஆசியானுக்குள் குறைந்தது இரண்டு டிரில்லியன் வெள்ளி மதிப்பிலான முதலீடுகள் சேராவிட்டாலும் நூற்றுக்கணக்கான பில்லியன் வெள்ளி முதலீடுகள் சேரும் வாய்ப்பு உள்ளது,” என்று அவர் விவரித்தார். 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள எரிசக்திக்கான ஆசியான் அமைச்சர்கள் சந்திப்புக்கு டாக்டர் டான் தலைமை தாங்குவார்.

இலக்குகள்

ஆசியான் மின்சாரக் கட்டமைப்பின் இலக்கு, வட்டார அளவில் மின்சாரத்தை ஆக்ககரமான முறையில் எல்லைகளைத் தாண்டி விநியோகிப்பதும் பசுமை எரிசக்தி முறைகள் பயன்படுத்தப்படுவதைத் துரிதப்படுத்துவதும் ஆகும். 2045ஆம் ஆண்டுக்குள் மின்சாரக் கட்டமைப்பை உருவாக்க ஆசியான் எண்ணம் கொண்டுள்ளது.

ஆசியான் வளர்ச்சி

ஆசியான், 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் நான்காவது ஆகப் பெரிய பொருளியலாக வளரக்கூடும். மேலும் அது, அவ்வட்டாரத்தில் உள்ள 700 மில்லியன் மக்களுக்கு பொருளியல் வளர்ச்சிக்கான கூடுதல் வாய்ப்புகளை வழங்கக்கூடும் என்று டாக்டர் டான் தெரிவித்தார்.

இவ்வட்டாரத்தில் 30 கிகாவாட் அளவு சூரியசக்தி, காற்றாலைத் திட்டங்கள் மூலம் கிட்டத்தட்ட 182,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படக்கூடும் என்று ‘எம்பர்’ ஆய்வு நிறுவனம் சென்ற ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. உற்பத்தி, மேம்பாடு, ஆதரவு உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்