ஆசியான் தலைமைத்துவத்தை 2027ல் பிலிப்பீன்சிடமிருந்து சிங்கப்பூர் பொறுப்பேற்பது, சீராகவும் சுமுகமாகவும் இடம்பெறுவதை இரு நாடுகளும் உறுதிசெய்யும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிலிப்பீன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருடன் புதன்கிழமை (ஜூலை 15) நடத்திய சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் வோங் இதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மாறிவரும் உலகளாவிய சூழலில், ஆசியான் அமைப்பின் ஒற்றுமையையும், அதன் பின்னடைவுகளைத் தாங்கும் வலிமையையும் வலுப்படுத்துவதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன. இவ்வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மை, பொருளியல் வாய்ப்புகளை மேம்படுத்தத் தொடர்ந்து பாடுபடத் தலைவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
சிங்கப்பூர், பிலிப்பீன்சின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒன்றாகும். இரு நாடுகளுக்கும் இடையே வணிகம், செயற்கை நுண்ணறிவு, பசுமைப் பொருளியல், மின்னிலக்கப் பொருளியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக திரு வோங் சுட்டிக்காட்டினார்.
ஏற்கெனவே இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரத் துறைகள் சார்ந்த திட்டங்களை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆசியானின் தலைவராகப் பிலிப்பீன்ஸ் ஆற்றிய சிறப்பான தலைமைத்துவத்திற்குப் பிரதமர் வோங் நன்றி தெரிவித்தார்.

