‘ஐநா’வின் பணிகளுக்கு ஆசியான் வலுசேர்க்க வேண்டும்: பிரதமர் வோங்

‘ஐநா’வின் பணிகளுக்கு ஆசியான் வலுசேர்க்க வேண்டும்: பிரதமர் வோங்

படம்: இபிஏ

16 Nov 2026 - 9:24 pm

2 mins read

உலகிற்கு இன்னும் அதிக ஒத்துழைப்பு தேவை என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) பணிகளுக்கு ஆசியான் வலுசேர்க்க வேண்டும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

அனைத்துலகச் சட்டத்தைக் கட்டிக்காப்பது, அனைத்துலகக் கடப்பாடுகளை நடைமுறை ஒத்துழைப்பாக மாற்றுவது, அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான, நம்பகமான மின்னிலக்க எதிர்காலத்தை வடிவமைப்பது ஆகியவற்றின் மூலம் அவ்வாறு செய்ய முடியும் என்று திங்கட்கிழமை (நவம்பர் 16) நடைபெற்ற ஆசியான்-ஐநா உச்சநிலை மாநாட்டில் அவர் கூறினார்.

தென்கிழக்காசியத் தலைவர்களுக்கும் ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெசுக்கும் இடையிலான சந்திப்பில், பலதரப்புவாதத்திற்கு மிகவும் சவாலான காலகட்டத்தில் குட்டரெஸ் ஐநாவின் தலைவராகப் பணியாற்றியுள்ளதைத் திரு வோங் சுட்டினார்.

“உலகிற்கு அதிக அளவில் அனைத்துலக ஒத்துழைப்பு தேவைப்படும் காலகட்டத்தில், நாடுகள் பொதுவான குறிக்கோளைக் கண்டறிந்து ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் கடினமாகி வருகிறது,” என்றும் பிரதமர் வோங் கூறினார்.

இருப்பினும், ஆசியானும் ஐநாவும் தங்களது ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

“ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு வெவ்வேறு தேசிய நலன்களும் கண்ணோட்டங்களும் இருக்கலாம். ஆனால், நமது வட்டாரத்தின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அடித்தளமாக விளங்கும் அனைத்துலகச் சட்டத்திற்கும் ஐநா சாசனத்திற்கும் நாம் அனைவரும் பொதுவான கடப்பாட்டைக் கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.

இதன் காரணமாகவே, மத்திய கிழக்குப் போரினால் ஏற்பட்ட ஹோர்முஸ் நீரிணை மூடலுக்கு எதிராக இக்கூட்டமைப்பு வலுவான நிலைப்பாட்டை எடுத்ததாகத் திரு வோங் கூறினார். அதோடு, அனைத்துலகக் கடற்பயணத்திற்குப் பயன்படுத்தப்படும் நீர்வழிகள் மூலம் செல்வது ஓர் உரிமையே தவிர, சுங்கக் கட்டணங்களுக்கு உட்பட்ட சலுகை அல்ல என்பதையும் அது உறுதிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்