இணையச் சேவைத் தடை: ‘ஃபைபர் ஆப்டிக்’ கம்பிவடம் சேதமடைந்ததற்கு ‘ஏசியா பைலிங்’ காரணம்

இணையச் சேவைத் தடை: ‘ஃபைபர் ஆப்டிக்’ கம்பிவடம் சேதமடைந்ததற்கு ‘ஏசியா பைலிங்’ காரணம்

2 mins read
3e541e31-76b9-4880-aaf0-233db738e5ce
அங் மோ கியோ, பீஷான், செங்காங், பொங்கோல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் 20 மணி நேரத்துக்கு இணையச் சேவைத் தடையால் பாதிப்படைந்தன. - படம்: சாவ்பாவ்

ஏப்ரல் 18ஆம் தேதியன்று 5,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு 20 மணி நேர இணையச் சேவைத் தடையை ஏற்படுத்திய முக்கிய நிலத்தடி ஃபைபர் ஆப்டிக் கம்பிவடங்கள் சேதமடைந்ததற்குப் பொது மற்றும் வணிகத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள ‘ஏசியா பைலிங்’ நிறுவனம் எனும் துணை ஒப்பந்ததாரரே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது கட்டுப்பாட்டு விதிகளை மீறி சீனப் புத்தாண்டுக் கூட்டத்தை நடத்தியதற்காக 2021ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்துக்கு $6,500 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில், ஒரு கூட்டத்தில் எட்டு பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற விதிமுறை நடப்பில் இருந்தபோதிலும் கடல் உணவு உணவகம் ஒன்றில் நடைபெற்ற அந்த இரவு விருந்தில் ஒன்பது மேசைகளில் 65 பேர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இணையச்சேவைத் தடை குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியலுக்கு நிலத்தடி தொலைத்தொடர்பு கம்பிவடங்கள் ஒரு முக்கிய உள்கட்டமைப்பாக இருப்பதனால், கண்டறிதல் தொழில்நுட்பங்களின் பரவலான பயன்பாடு, புதுப்பிக்கப்பட்ட நிலத்தடி வரைபடங்கள் மற்றும் தவறுகளுக்குக் கடுமையான அபராதங்கள் ஆகியவற்றை வல்லுநர்கள் கோருகின்றனர்.

சிங்கப்பூரில் உள்ள அனைத்து முக்கிய இணையச் சேவை வழங்குநர்களான சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1, சிம்பா, வியூகுவெஸ்ட், மைரிபப்ளிக் ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் இந்தக் கம்பிவடச் சேதத்தால் பாதிக்கப்பட்டனர்.

இந்தக் கம்பிவடத் துண்டிப்பானது, பேருந்து வருகை தகவல்களின் ஒளிபரப்பையும் பாதித்தது.

கட்டுமானப் பணிகளின்போது போதிய கம்பிவடக் கண்டறிதல் இல்லாமை, மனிதத் தவறு அல்லது போதிய கண்காணிப்பு இல்லாமை போன்றவற்றால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படலாம் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.

துணை ஒப்பந்ததாரரின் பெயரைக் குறிப்பிட்டதில், பிரதான ஒப்பந்ததாரர் ‘ஹுவா செங் - சாய் ஜூ - ஹோ லீ ஜாயின்ட் வென்ச்சர்’ என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள நகரங்களை நகர மையத்துடன் இணைப்பதற்காக பேரளவில் நிலத்தடியில் அமைக்கப்படும் 21.5 கிலோ மீட்டர் நீளமுள்ள வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் ஒரு பகுதியை இந்நிறுவனங்கள் கட்டி வந்தன.

அகழ்வாய்வுப் பணிகளுக்கான பாதுகாப்புச் சுவரை அமைப்பதற்காக தரையில் பெரிய செங்குத்து துளைகளை இட்டு அவற்றை கான்கிரீட்டால் நிரப்பும் தொடர்ச்சியான துளையிடும் பணியை ஏசியா பைலிங் மேற்கொண்டிருந்தபோது, அது நிலத்தடி கம்பிவடங்களைச் சேதப்படுத்தியது.

இதன் விளைவாக, அங் மோ கியோ, பீஷான், செங்காங், பொங்கோல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் 20 மணி நேரத்துக்கு இணையச் சேவைத் தடையால் பாதிப்படைந்தன.

குறிப்புச் சொற்கள்