மத்திய கிழக்கு வட்டாரத்தில் ஆகாயப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தொலைதூர விமானப் பயணங்கள் தொடர்பான போக்குகளில் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகள் வழியாக ஐரோப்பாவுக்குப் பயணம் மேற்கொள்வோரை இப்போது ஆசிய விமானங்கள் ஏற்றிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கூடுதல் சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகப் பல ஆசிய விமான நிறுவனங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன. இச்வேவைகளுக்கு வலுவான வரவேற்பு இருப்பதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.
மத்திய கிழக்குப் பூசலால் எமிரெட்ஸ், கத்தார் ஏர்வேஸ், எட்டிஹாட் போன்ற நிறுவனங்கள் அவ்வட்டாரத்தில் தங்களின் சேவைகளைக் குறைத்துக்கொண்டுள்ளன அல்லது ரத்து செய்துள்ளன. பூசல் காரணமாக அப்பகுதியில் சேவை வழங்குவது சிக்கலாக இருப்பது இதற்குக் காரணம்.
அதனால் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கிய மத்திய கிழக்குப் பகுதிகளில் விமானச் சேவைகள் மாற்றிவிடப்பட்டு அல்லது ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கும் ஐரோப்பாவுக்கும் ஆஸ்திரலேசியாவுக்கும் இடையே வழங்கப்படும் விமானச் சேவைகளில் பாதிக்கும் மேலானவையும் துபாய், டோஹா போன்ற மத்திய கிழக்குப் பகுதிகள் வழியே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

