குழப்பம் நிறைந்த உலகில் ஆசிய உறவுகள் வலுப்பெறுவது அவசியம்: கான்

குழப்பம் நிறைந்த உலகில் ஆசிய உறவுகள் வலுப்பெறுவது அவசியம்: கான்

2 mins read
901caf1b-2875-429b-b7a6-d0d4d3863866
தோக்கியோவில் நடைபெற்ற நிக்கேய் கருத்தரங்கில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் உரையாற்றினார். - படம்: இபிஏ
multi-img1 of 2

உலகளாவிய நிலவரம் மோசமடைந்து வரும் நிலையில், துடிப்பான பங்காளித்துவத்தை ஏற்படுத்தவும் வட்டார ஒருங்கிணைப்பை இரட்டிப்பாக்கவும் ஆசியாவுக்கு சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் அழைப்பு விடுத்துள்ளார்.

அடைந்த வெற்றியே போதும் என்று அலட்சியமாக இருப்பதைக் கைவிட்டு நாட்டுக்கு நாடு பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆசிய வட்டார நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசியபோது அவர் அந்தக் கருத்தை வெளிப்படுத்தினார்.

ஆசியாவின் வருங்காலம் பற்றிய 30வது நிக்கேய் அனைத்துலகக் கருத்தரங்கு என்னும் தலைப்பில் அந்நிகழ்வு நடைபெற்றது.

திரு கான் தமது உரையில், “ஆசிய நாடுகள் பலவும் ஒன்றோடு ஒன்று இருதரப்பு, பலதரப்பு, வட்டார அளவு என்று வெவ்வேறு வகைகளில் பொருளியல் ரீதியாக உறவு வைத்துள்ளன,” என்றார்.

“அந்தப் பங்காளித்துவத்தில் கிடைக்கும் ஆதாயமே போதும் என்று, உறவைப் பலப்படுத்தாமலும் உறவின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமலும் இருந்துவிட்டால் அது ஆபத்தில் போய் முடியும்.

“தற்போதைய கொந்தளிப்பான நிலவரம் சவால்களைக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். பங்காளித்துவத்தை வலுப்படுத்த ஒவ்வொரு நாடும் கொண்டிருக்க வேண்டிய குறிக்கோளை இன்னும் உயர்த்த வேண்டும் என்பதையும் நாம் அறிய வேண்டும்,” என்று துணைப் பிரதமர் கான் விளக்கினார்.

வரிவிதிப்பை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள 90 நாள் கெடு ஜூலை 8ஆம் தேதி முடிவுக்கு வந்த பின்னர் என்ன நிகழும் என்பதன் அடிப்படையில் பேசிய திரு கான், தற்போது அதிக நிச்சயமற்ற நிலையில் நாம் போராடி வருகிறோம் என்றார்.

உலகம் சிக்கலில் சிக்கியுள்ள இப்போதைய காலகட்டத்தில் உறவை ஏற்படுத்துவதில் துடிப்பும் நீக்குப்போக்கும் நாடுகளிடையே இருக்க வேண்டியது இன்றியமையாதது என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

“நிலைமை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. காலையில் நாளிதழைப் புரட்டினால் வர்த்தகம், வரி ஆகியன தொடர்பான செய்திகளே பெரிதும் கண்ணில் படுகின்றன. அவற்றோடு, அதிர்ச்சி கலந்த செய்திகளும் இடம்பெற்று வருகின்றன,” என்றார் சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான்.

குறிப்புச் சொற்கள்