சிங்கப்பூரில் முதலீடு செய்யும் பெருஞ்செல்வந்தர்கள், தங்களது சொத்துகளை கணிசமான அளவில் பெருக்கிவருகின்றனர். அதேவேளையில் ரொக்கத்தையும் வைப்புத் தொகையையும் தக்கவைத்துக்கொள்ளவே அவர்கள் விரும்புகின்றனர்.
தேவைக்கேற்ப அச்சொத்துகளை ரொக்கமாக மாற்றிக்கொள்வதை அவர்கள் தேர்வுசெய்வதால், முதலீடுகளில் அச்செல்வத்தை அதிக அளவில் செலவிடும்படி அவர்களை ஊக்குவிப்பது, வங்கிகளுக்குச் சவாலாக அமைகிறது.
இவ்வாண்டின் முற்பாதியில் உயர் நிகர மதிப்புள்ள மேல்மட்ட செல்வந்தர்கள் வைத்திருக்கும் சொத்து மதிப்பு S$1.95 மில்லியன் (US$1.5 மில்லியன்) ஏற்றமடைந்ததோடு அதே காலகட்டத்தில் 2025ல் அது S$1.8 மில்லியனாக (US$1.41 மில்லியன்) இருந்தது.
இதன் விவரங்களை சிட்டி வங்கியின் சிட்டி வெல்த் அமைப்பும் ஆர்எஃப்ஐ குளோபல் ஆய்வு நிறுவனமும் கடந்த வாரம் (அக்டோபர் 22) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
நிர்வாகத்தின்கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு, 5 விழுக்காடு உயர்ந்து 2026ன் முற்பாதியில் S$723,603 (US$565,000) என அமைந்தது. கடந்த ஆண்டு அது S$688,639 (US$537,710) என இருந்தது.
உயர் நிகர மதிப்புள்ள பிரிவில் உள்ள வங்கியின் வாடிக்கையாளர்கள், குறைந்தது S$1.28 மில்லியன் (US$1 மில்லியன்) வரையிலான மதிப்புள்ள சொத்துகளை வங்கியின் நிர்வாகத்தின்கீழ் வைத்திருப்போர் ஆவர். அவ்வகைச் சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய ரொக்கம் போன்ற செல்வங்களும் உள்ளடங்கும்.
வசதிபடைத்த பிரிவில் உள்ள வாடிக்கையாளர்கள் S$128,000 (US$100,000) முதல் S$1.28 மில்லியன் (US$1 மில்லியன்) வரையில் வங்கியில் வைத்திருப்போரைக் குறிக்கும்.
வட்டார அளவில் நிதி நிர்வாக மையமாக தன்னை நிலைநாட்டிக்கொள்வதை சிங்கப்பூர் வலுப்படுத்திவரும் சூழலில் இந்த அடிப்படை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதுவே வெளிநாடுகளில் இருந்து எல்லைகளைக் கடந்து முதலீடு செய்வோரை சிங்கப்பூருக்கு கவர்ந்திழுத்துள்ளது என்று ஆய்வு குறிப்பிட்டது.
உள்நாட்டில் உள்ள ரொக்கம் உட்பட வைப்புத்தொகை சார்ந்த சொத்துகள் 72 விழுக்காடு எனவும், வசதிபடைத்த வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து முன்பதிவு செய்த சொத்துகள் 74 விழுக்காடு எனவும் அந்த அறிக்கை தெரிவித்தது. அவற்றில் 26 முதல் 28 விழுக்காட்டு சொத்துகள் மட்டுமே முதலீடுகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.
உயர் நிகர மதிப்புள்ள பிரிவுக்கான எண்ணிக்கைகள் அறிக்கையில் வழங்கப்படவில்லை.
