சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் (எஸ்யுடிடி) சுய உதவிக் குழுவான மெண்டாக்கியும் இணைந்து மலாய்-முஸ்லிம் சமூகத்தினருக்குப் புதிய பயிற்சி, திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்கவிருக்கின்றன.
வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தில் திறன்களை வளர்த்துக்கொள்ள அவை ஒன்றுசேர்ந்து முயற்சிகளை மேற்கொள்கின்றன.
தொடக்கமாக, மெண்டாக்கி அமைப்பின் 200 ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். ‘எஸ்யுடிடி-யாயாசான் மெண்டாக்கி ஆக்கமுறை ஏஐ நிபுணத்துவப் பயிற்சி வகுப்பு’ என்று அழைக்கப்படும் அது இரண்டு நாள் நடைபெறும்.
வேலையிலும் உற்பத்தித்திறனைப் பெருக்கிக்கொள்வதிலும் ஏஐ தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மெண்டாக்கி அதிகாரிகள் கற்றுக்கொள்ளப் பயிற்சி கைகொடுக்கும். அன்றாடப் பொறுப்புகளைக் கையாள்வதையும் சமூகத்தினருக்குச் சேவை வழங்குவதையும் ஊழியர்கள் மேலும் சிறந்த முறையில் நிர்வகிக்க அது உதவியாக இருக்கும்.
பல்கலையும் மெண்டாக்கியும் ஏஐ, வடிவமைப்பு, பயன்பாட்டுக் கற்றல் முதலியவற்றில் இணைந்து செயல்பட இணங்கியுள்ளன. அதற்குரிய புரிந்துணர்வுக் குறிப்பில் இருதரப்பும் புதன்கிழமை (மார்ச் 18) கையெழுத்திட்டன. எஸ்யுடிடியின் பேராசிரியர் டாய் லீ சியாங்கும் மெண்டாக்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபெரோஸ் அக்பரும் புரிந்துணர்வுக் குறிப்பொன்றில் கையெழுத்திட்டனர். மெண்டாக்கியின் தலைவரும் தற்காப்பு, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சருமான திரு ஸாக்கி முகம்மது அதனைப் பார்வையிட்டார்.
பல்கலையும் மெண்டாக்கியும் கூட்டு ஆய்வு, திட்டங்களில் சேர்ந்து பணியாற்றப் புரிந்துணர்வுக் குறிப்பு வழிவிடும்.
புதிய ஏற்பாட்டின்படி, மலாய் முஸ்லிம்கள் பல்கலையின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். பல்கலையின் ஊழியர்களும் மாணவர்களும் மெண்டாக்கியின் திட்டங்களில் கலந்துகொள்வர். கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது, சமூக விழிப்புணர்வை அதிகரிப்பது, மலாய் முஸ்லிம் சமூகத்திற்குள் மின்னிலக்க ஆற்றல்களை வளர்ப்பது, புத்தாக்கத்தை வலுப்படுத்துவது முதலியவை அதன் நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
மலாய் முஸ்லிம் சமூகத்தினர், ஏஐ தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ள உதவுவதில் மெண்டாக்கிக்குப் பங்கிருப்பதாகத் திரு ஸாக்கி கூறினார். அவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அஞ்சக்கூடாது என்பதையும் தொடர்ந்து போட்டித்தன்மையோடு திகழ்வதையும் உறுதிசெய்ய மெண்டாக்கி கைகொடுக்கும் என்றார் அவர். புரிந்துணர்வுக் குறிப்பு நிகழ்ச்சிக்கு இடையே செய்தியாளர்களிடம் திரு ஸாக்கி பேசினார்.
சமூகத்தினர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தயக்கமின்றிப் பயன்படுத்துவதில் உதவ மற்ற மலாய் முஸ்லிம் அமைப்புகளும் முன்வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

