மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அரசாங்க அதிகாரிகள் போல் கைப்பேசியில் அழைத்து சிங்கப்பூர் வாசிகளை மோசடி செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை (மார்ச் 14) மோசடி செய்யும் கும்பலுக்கு உதவியதாக 38 வயது ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த மாதம் 10ஆம் தேதி மோசடியாளர் ஒருவர் தாம் ஹெச்எஸ்பிசி (HSBC) வங்கி ஊழியர் என ஒரு பெண்ணின் தொலைபேசிக்கு அழைப்புவிடுத்துள்ளார். வங்கியின் கடன்பற்று அட்டைத் தொடர்பாக அப்பெண்ணிடம் மோசடியாளர் விசாரணை செய்துள்ளார்.
பின்னர் மோசடியாளர்கள், சட்ட அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அதிகாரிகள் போல் பேசி அப்பெண்ணை மிரட்டியுள்ளனர்.
அந்தப் பெண் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றத்திற்குத் தொடர்புடையவர் எனக் கூறி அவரிடமிருந்து தங்கம் , விலை உயர்ந்த கடிகாரங்கள் என 920,000 வெள்ளி மதிப்பிலான பொருள்களை மோசடியாளர்கள் கையகப்படுத்தினர்.
இரண்டு முறை வெவ்வேறு நபர்களிடம் தமது பொருள்களை அப்பெண் கொடுத்துள்ளார். தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் உடனடியாகக் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
அதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மோசடிக் கும்பல்களுக்குப் பொருள்களை வாங்க உதவும் ஆடவர் ஒருவர் பிடிபட்டார். அவரை அதிகாரிகள் மார்ச் 13ஆம் தேதி கைது செய்தனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில் அந்த 38 வயது ஆடவர் பலமுறை பொதுமக்களிடம் இருந்து பொருள்களை வாங்கி மோசடியாளர்களிடம் கொடுத்தது வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த ஆடவரிடம் இருந்து $92,500 ரொக்கம், ரொக்கம் எண்ணும் கருவி, மூன்று கைப்பேசிகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணை தொடர்கிறது.

