சிங்கப்பூர் வழியாகக் கொண்டுசெல்லப்பட்ட ஆசிய பெங்கோலின் எறும்புத்தின்னிகளின் செதில்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஏறக்குறைய 2,200 எறும்புத்தின்னிகளிடமிருந்து எடுக்கப்பட்ட செதில்களின் எடை 830 கிலோகிராமுக்கும் அதிகம்.
சிங்கப்பூர் கைப்பற்றிய ஆகப் பெரிய அளவிலான எறும்புத்தின்னி செதில்கள் அவை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்தோனீசியாவிலிருந்து கம்போடியாவுக்கு கடல்வழியாகக் கடத்திச்செல்லப்படவிருந்த அந்தச் செதில்கள் லாரியில் வைக்கப்பட்டிருந்தன. அதைக் கடத்தியவர்கள் அந்தச் செதில்களைக் கருவாடு என்று கூறியிருந்தனர்.
எனினும், கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் லாரியை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
லாரியிலிருந்து கைப்பற்றப்பட்ட செதில்கள் சுன்டா எறும்புத்தின்னியின் செதில்கள் என்று தேசியப் பூங்காக் கழகம் உறுதிப்படுத்தியது. அரிய வகை சுன்டா எறும்புத்தின்னிகள் சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவை.
சனிக்கிழமை (மார்ச் 28) பிசிஏ அகாடமியில் நடைபெற்ற உலக வனவிலங்கு நாள் வட்டார இளையர் மாநாட்டில் தேசிய மேம்பாட்டுத் துணையமைச்சர் அல்வின் டான் கடத்தல் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டு விசாரணை தொடர்வதாகக் கூறினார்.
வனவிலங்கு கடத்தலைக் கண்டறிந்து முறியடிக்க ஒட்டுமொத்த அரசாங்கமும் மேற்கொள்ளும் முயற்சிக்கு அந்தக் கடத்தல் சம்பவம் ஓர் உதாரணம் என்றார் அவர்.
“இருப்பினும் அமலாக்க நடவடிக்கைகள் மட்டும் போதாது. வெவ்வேறு துறைகளில் உள்ள அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டு வனவிலங்கு வர்த்தகத்தை முறியடிக்கவேண்டும்,” என்று திரு அல்வின் அழைப்புவிடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
உலக அளவிலான வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு கடல்வழியாக நடைபெறுவதால் வனவிலங்குக் கடத்தலை எளிதில் கண்டுபிடித்துவிடமுடியாது என்றார் அவர். கடல்வழியாகச் செல்லும் மில்லியன்கணக்கான சரக்குக் கப்பல்களில் வனவிலங்குகளும் அவற்றின் பாகங்களும் பதுக்கப்பட்டிருக்கலாம் என்றார் திரு அல்வின்.
வனவிலங்குக் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க டிராஃபிக் (TRAFFIC) என்ற வனவிலங்கு வர்த்தகத்தைக் கண்டறியும் கட்டமைப்பை அவர் அறிவித்தார்.

