சிங்கப்பூரின் ‘கிரேட்டர் செந்தோசா’வுக்கான பெருந்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களையும் சுற்றுப்பயணிகளையும் கவர்ந்திழுக்கும் புதிய அம்சங்கள் 2030ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியிலிருந்து படிப்படியாகத் தயாராகும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அம்சங்களில் இம்பியா மலையின் உச்சிக்குச் செல்ல, கூரையுடன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நடைபாதையும் அடங்கும் என்று பெருந்திட்டத்திற்கான வரைபட விளக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த விளக்கம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) வெளியிடப்பட்டது.
சுற்றுப்பயணங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், சிங்கப்பூர் தனது அனுபவங்களைப் புதுப்பிப்பதற்கும் ஒரு சுற்றுலாத்தலமாக அதன் ஈர்ப்பை அதிகரிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியே இந்தப் பெருந்திட்டம் என்று வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பேற்கும் அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.
“இனி வரவிருக்கும் காலங்களில் செந்தோசா எப்படிப்பட்ட இடமாக மாறவேண்டும் என்பதைப் புதிய கண்ணோட்டத்தில் வடிவமைத்து வருகிறோம்.
“உருமாறிய, நன்கு இணைக்கப்பட்ட, நிலைத்தன்மை வாய்ந்த ஒரு தீவாக செந்தோசா திகழும்,” என்றார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சருமான திருவாட்டி ஃபூ.
பெருந்திட்டத்தை விளக்கும் கண்காட்சி விவோசிட்டியில் வெள்ளிக்கிழமை தொடங்கியபோது அந்நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசினார்.
“புதிய பெருந்திட்டம் கிரேட்டர் செந்தோசாவை ஒரு விளையாட்டுத்தலத் தீவாக மறுவரையறை செய்யும். இதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் திடமான, துடிப்பான, பரவசம் மிகுந்த ஒரு பகுதியாக அது அமையும்,” என்றார் அவர்.
இருப்பினும், கிரேட்டர் செந்தோசாத் திட்டத்திற்கு ஆகும் பொருட்செலவு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
பெருந்திட்டப் பணிகள் முடிவுற்று புதிய அம்சங்கள் திறக்கப்படும்போது செந்தோசாவுக்குத் தற்போது வருகையளிப்போரைக் காட்டிலும் இருமடங்கு அதிகமானோரை அவை கவர்ந்திழுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருந்திட்டத்தில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்களில் பொதுமக்கள் செந்தோசாவை அடைவதற்கான வசதிகளும் அடங்கும். தற்போதைய 2.1 கிலோமீட்டர் நீள செந்தோசா எக்ஸ்பிரஸ் மோனோரயிலுக்குப் பதில் புதிய வசதி இடம்பெறும்.
அந்தப் புதிய போக்குவரத்து அமைப்பு அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் தரைமட்டத்தில் அது அமைக்கப்படும் என்றும் செந்தோசா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
பிரானி போக்குவரத்து மையத்திற்கும் செந்தோசா முழுவதற்கும் வருகையாளர்களை அது கொண்டு செல்லும் என்று தெரிவித்த கழகம் அது எப்போது சேவை வழங்கத் தொடங்கும் என்று குறிப்பிடவில்லை.

