லிட்டில் இந்தியா வட்டாரத்தில் போருக்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்ட 18 பாதுகாக்கப்பட்ட கட்டடங்களின் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஏழு ஏலங்களை ‘ஒய்கே லேண்ட்’ நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
சதுர அடிக்கு $962 என்ற மதிப்பீட்டில் மொத்தம் $35.3 மில்லியனுக்கு அது ஏலம் போயுள்ளது.
செட்டி ரோட்டுக்கும் வீராசாமி ரோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள அந்தத் தளத்தை அரசாங்க நில விற்பனையின்கீழ் நகர மறுசீரமைப்பு ஆணையம் ஏலத்திற்கு விட்டது.
காலியாக உள்ள தளத்தை மறுசீரமைப்பதற்குப் பதிலாக தற்போதைய கட்டமைப்பை மீட்டெடுக்குமாறு ஏலக்குத்தகை வலியுறுத்துவதால் அது ஓர் அசாதாரண குத்தகையாகத் தோன்றியது.
அந்தக் கட்டடங்கள் குடியிருப்பு அல்லது நீண்டகால சேவைக் குடியிருப்புகள் II (SA2) பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட உள்ளன.
சேவைக் குடியிருப்புகள் என்பது, நீண்டகாலத் தங்குமிட வசதி கொண்ட குடியிருப்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இது நீண்ட கால வாடகைக் குடியிருப்பை நாடும் குடியிருப்பாளர்களுக்கான ஒரு முன்னோடி குடியிருப்பு ஆகும்.
நெகிழ்வான குறுகிய அல்லது நீண்டகாலம் தங்கியிருப்பதற்கான பராமரிப்பு, இணையச்சேவை மற்றும் பயன்பாட்டுச் சேவைகளுடன் ஹோட்டல் போன்ற வசதிகளை வழங்குவதே சேவைக் குடியிருப்புகள்.
ஏலத்திற்கு விடப்பட்டுள்ள தளத்தில் அதுபோன்ற 36 சேவைக் குடியிருப்புகளையோ தனித்தனியான 18 அடுக்கு வீடுகளையோ கட்டமுடியும் என ஆணையம் கருதுகிறது.
அந்தத் தளத்திற்கான ஏலம், சந்தை நிலவரத்திற்கேற்ப தற்காலிக முடிவுகளுடன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) முடிவடைந்தது.
அதற்கு மூன்று முதல் 10 ஏலக்கேட்புகள் வரை வரும் என்று பிஸ்னெஸ் டைம்ஸ் நடத்திய ஆய்வில் பங்கேற்ற பகுப்பாய்வாளர்கள் திங்கட்கிழமை (ஜூலை 27) கணித்திருந்தனர்.
இரண்டாவது அதிகத் தொகையான $23.8 மில்லியனுக்கான ஏலக்கேட்பு, கோனின்ட் மற்றும் சீடோ வென்சர்ஸ் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டிருந்தது. சதுர அடிக்கு $650 என்ற கணக்கில் அந்த ஏலம் கேட்கப்பட்டிருந்தது.

