ஆட்ரி ஃபாங் வழக்கில் சிங்கப்பூருக்கு அதிகாரம் இல்லை: உள்துறை அமைச்சு

2 mins read
ded493c1-0842-46de-8a14-9c9811e56623
கொல்லப்பட்ட ஆட்ரி ஃபாங் (வலது), சந்தேக நபர் மிட்செல் ஓங். - படங்கள்: strongestasian / இன்ஸ்டகிராம், Fang Dirou / ஃபேஸ்புக்

சிங்கப்பூரரான ஆட்ரி ஃபாங் ஸ்பெயினில் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேக நபரான மிட்செல் ஓங் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க சிங்கப்பூருக்கு அதிகாரம் கிடையாது என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓங்கை சிங்கப்பூரிடம் ஒப்படைக்க அனுமதி வழங்குமாறு ஸ்பானிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், சிங்கப்பூரரான மிட்செல் ஓங் நாடுகடத்தப்படுவதை ஸ்பானிய நீதிபதி ஒருவர் தடுத்தார் என்று முன்னதாகத் தெரிவிக்கப்ட்டிருந்தது.

சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுவதைத் தொடர்ந்து நீதிபதி அந்த முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் உள்துறை அமைச்சு, தங்களின் நிலைப்பாட்டை ஸ்பானிய உள்துறை அமைச்சிடம் தெரியப்படுத்தியதாக வியாழக்கிழமை (மே 29) கூறியது. சிங்கப்பூரின் சட்டங்களுக்கு உட்பட்டு சிங்கப்பூர் அரசாங்கம் உதவிக்கரம் நீட்டும் என்றும் உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.

தங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிங்கப்பூர் உள்துறை அமைச்சு பதிலளித்தது.

ஓங் மீது தற்போது ஸ்பெயினில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துவருவதாக அங்குள்ள சட்ட ஓழுங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓங் நாடுகடத்த விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்ட செய்தியை ஸ்பெயினின் லா ஒப்பினியன் டி மர்சியா (La Opinion de Murcia) புதன்கிழமை (மே 28) முதலில் வெளியிட்டது. அவரை நாடுகடத்த அனுமதி தருமாறு அந்நாட்டின் எல்லை, குடிநுழைவு விவகாரங்களுக்கான தேசியக் காவல்துறை அமைப்பு கேட்டுக் கொண்டிருந்தது.

திருவாட்டி ஃபாங்கின் குடும்பத்தாரும் அந்த வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எனினும், வெளிநாட்டவரை நாடுகடத்துவதற்கான ஸ்பெயினின் சட்டங்களை அந்த வேண்டுகோள் பூர்த்திசெய்யவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். ஆறு ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத் தண்டனை அல்லது அபராதம் போன்ற மாற்றுத் தண்டனை விதிக்கப்பட்ட தனிநபர்தான் உடனடியாக நாடுகடத்தப்படலாம் என்பது அத்தகைய சட்டங்களில் ஒன்று.

ஓங் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அவருக்குக் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

ஓங்கை நாடுகடத்த அனுமதி வழங்கினால் அதோடு அவர் ஸ்பெயின் திரும்ப 10 ஆண்டுகாலத் தடை விதிக்குமாறும் ஸ்பானிய குடிநுழைவு ஆணையம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஓங்கின் வழக்கறிஞர் ருயிஸ் டி காஸ்டனேடா, ஓங்கை நாடுகடத்துவது சட்டத்தையும் ஸ்பெயின் கையெழுத்திட்ட அனைத்துலக ஒப்பந்தங்களையும் மீறும் செயலாகும் என்று முன்னதாக உள்நாட்டு ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

“அவர் ஸ்பெயினில் தொடரும் குற்றவியல் வழக்கில் ஈடுபட்டுள்ளார். அங்கே அவர் மீது தகுந்த நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளவேண்டும்,” என்று திருவாட்டி ருயிஸ் டி காஸ்டனேடா சொன்னார்.

குறிப்புச் சொற்கள்